அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல முயற்சித்த ஓபிஎஸ்-க்கு எடப்பாடி தரப்பு வைத்த செக்
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றிருந்தார். இதனைத்தொடர்ந்து அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக கூறப்படும் ஓ பன்னீர்செல்வம் அவர்களும் அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்குச் செல்ல திட்டமிட்டு இருந்தார்
இவர் அதிமுகவின் தலைமை அலுவலகம் செல்லும் போது அச்சுறுத்தல் எதுவும் நிகழாமல் இருக்க தனக்கு பாதுகாப்பு வேண்டும் என காவல்துறையினரிடம் அனுமதி கேட்டிருந்தார். இதுகுறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகரன் காவல் துறையினரிடம் மனு அளித்திருந்தார்.
அதாவது கட்சி அலுவலகத்திற்கு செல்லும் போது அவருடைய ஆதரவாளர்கள் அங்கு வர வாய்ப்புள்ளதால் இரு தரப்பினருக்கு இடையே எந்த ஒரு பிரச்சனையை ஏற்படாமல் இருக்க உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என காவல் துறையிடம் மனு அளித்திருந்தனர்.
இதற்கு பதிலளித்த காவல்துறை ஓ பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகம் செல்ல நீதிமன்றத்தில் முறையான அனுமதி பெற வேண்டும். அவ்வாறு நீதிமன்றம் அனுமதி அளித்தால் அவர் கட்சி அலுவலகம் செல்லும் போது பாதுகாப்பு தர தயாராக உள்ளதாகவும் பதில் அளித்தனர்
அந்த வகையில் சென்னையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு ஓ பன்னீர்செல்வம் செல்வதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது என்பது உறுதியாகிறது.
இந்நிலையில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களே அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைய அனுமதிக்க கூடாது என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் டிஜிபி அலுவலகத்துக்கு சென்று மனு அளித்துள்ளார். அதில் கட்சிக்கு தொடர்பில்லாதவர்கள் அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் நுழைவதை தடுக்க பாதுகாப்பு வேண்டும்.
குறிப்பாக நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அதிமுக கட்சிக்கும் ஓபிஎஸ்க்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. அந்த வகையில் கட்சியில் உறுப்பினர் இல்லாத ஒருவர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை எப்படி கோர முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.