சக்ஸஸ் செய்த எடப்பாடி பழனிசாமி.. சான்ஸ் தந்தும் சறுக்கிய ஓபிஎஸ்! பாஜக ஆட்டம் இனிதான் ஆரம்பம்
சென்னை:
எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக கூட்டணி பிரமாதமாக அமையும் என்றே தெரிகிறது. இதில் ஓபிஎஸ்ஸின் ரோல் என்ன என்பது தான் இப்போது கேள்வியாக எழுந்துள்ளது.
ஒருமுறை, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, “திராவிடக் கட்சிகளின் அழிவில் தான் தமிழகத்தின் எதிர்காலம் உள்ளது” என்று திடமாக கூறியிருந்தார்.
ஆனால் ஒரு தேசிய கட்சியே என்றாலும் கூட, வடமாநிலங்களை தன்பிடியில் வைத்திருக்கும் ஜாம்பவான் கட்சியே என்றாலும்கூட, தமிழகத்தில் இன்றுவரை இதற்கு சாத்தியமில்லை என்பதே நிதர்சனம்.
பாஜக வியூகம்
திராவிட கட்சிகள் இல்லாமல் தமிழ்நாட்டில் தம்மால் ஒரு இம்மியளவு கூட முன்னேற முடியாது என்ற யதார்த்தத்தை பாஜக நன்றாகவே உணர்ந்திருக்கிறது. அதனால் தான் அதிமுகவின் முதுகில் சவாரி செய்து, தமிழகத்தில் கால் ஊன்ற முயற்சிகளை எடுத்து வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை, திமுகவைவிட அதிக வாக்கு வங்கியை பெற்றுள்ளது அதிமுக ஆகச்சிறந்த பிளஸ் பாயிண்ட். இந்த வாக்குவங்கியை சிந்தாமல் சிதறாமல் தங்கள் பக்கம் திருப்பிக் கொள்ளவும் பாஜக முனைப்பு காட்டுகிறது.
கொங்குமண்டலத்தில் ஓரளவு ஆதரவை தக்க வைத்துள்ள நிலையில், தென்மண்டங்களில் தன்னுடைய அக்கவுண்ட்டை பாஜக புதிதாக ஓபன் செய்யவும் ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் போன்ற முக்குலத்தோர் புள்ளிகளையும் தங்களுக்கு சாதகமாகவும், சாதுர்யமாகவும் வைத்து கொண்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி செல்வாக்கு
எனினும் அதிமுக என்ற கட்சி 95 சதவீதம் எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளதாகவே கூறப்படுகிறது. எதற்காக எடப்பாடிக்கு இவ்வளவு ஆதரவுகள் இருக்கின்றன, என்ன காரணம்? என்ற விமர்சனங்கள் ஆயிரம் இருந்தாலும், கட்சியில் மெஜாரிட்டி, எடப்பாடியிடம் உள்ளதே உண்மை.
எனவே, கட்சிக்கு தான் மட்டுமே தலைவர் என்ற ஒற்றை தலைமை விவகாரத்தை, மிகச்சரியான நேரத்தில் அரங்கேற்றினார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், பாஜகவை பொறுத்தவரை, ஜெயலலிதாவுக்கு பிறகு, அதிமுகவுக்கு பிரதான தலைமை இருப்பதை விரும்பவில்லை என தெரிகிறது.
பாஜகவின் கணக்கு
அதாவது, அதிமுக பலவீனமாக இருந்தால் மட்டுமே பாஜகவை தமிழகத்தில் வார்த்தெடுக்க முடியும் என்ற கணக்கை போடுகிறது. அதனால் அதிமுகவில் பிரதான ஆளுமைகள் வளருவதையும் அக்கட்சி ஆர்வம் காட்டவில்லை.
அதனாலேயே இரட்டை தலைமை என்ற விவகாரத்தை கிண்டி விட்டதாக கூறப்பட்டது. இதற்கு, கடந்த முறை போலவே, இந்த முறையும் பகடை காயானார் ஓபிஎஸ். கிட்டத்தட்ட பாஜக ஆதரவாளராகவே பார்க்கப்பட்டும் வருகிறார் ஓபிஎஸ்.
ஓபிஎஸ் செல்வாக்கு
தென்மண்டலத்தில் ஓபிஎஸ்ஸூக்கு அசைக்க முடியாத செல்வாக்கு இருக்கவே செய்கிறது.
முக்குலத்தோர் வாக்குகள் இயல்பாக ஓபிஎஸ்ஸுக்கு இருந்தாலும், எடப்பாடி மீதான அதிருப்திகள் காரணமாக இந்த செல்வாக்கு ஓபிஎஸ்ஸுக்கு கடந்த 2 வருடங்களில் சற்று அதிகமாகிவிட்டது என்றே சொல்லலாம்.
மேலும் கொங்கு பகுதியிலும் தன்னுடைய செல்வாக்கை அதிகப்படுத்த வியூகம் வகுத்து வருகிறார். இதற்கு மூத்த தலைவர், பண்ருட்டி ராமச்சந்திரன் பக்கபலமாக இருந்து வருவதாகவும் தெரிகிறது.
பாஜகவுக்கு பின்னடைவு
எனினும், எடப்பாடி பழனிசாமியை தவிர்த்துவிட்டு பாஜகவால் கூட்டணி பற்றி யோசிக்க முடியாது. சசிகலா, தினகரன், ஓபிஎஸ், பாமக, தேமுதிக, பாரிவேந்தர், கிருஷ்ணசாமி, வாசன் போன்றோரை வைத்து ஒரு கூட்டணியை குத்துமதிப்பாக போட்டாலும், மெகா கூட்டணி என்று இவைகளை சொல்லிவிட முடியாது என்பதை பாஜகவே உணர்ந்துள்ளது. அதனால்தான், ஒருங்கிணைந்த அதிமுக என்ற விஷயத்தை பாஜக முன்வைக்கிறது. இதற்கு எடப்பாடி பழனிசாமி ஒத்துழைக்காமல் பிடிவாதம் பிடிக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி முன்வைக்கும் கோரிக்கைகள் வெரிசிம்பிள்.. அதிமுகவின் பொதுச்செயலாளராக தன்னை அறிவிக்க வேண்டும், இரட்டை இலையை தர வேண்டும் என்பதே பிரதான டிமாண்டுகளாக உள்ளது. வேண்டுமானால் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு இரட்டை இலக்க சீட்களை ஒதுக்கவும் தயார் என்பது போலவே அவரது வேண்டுகோள்கள் அமைந்து வருவதாக தெரிகிறது. இதை மேலிடம் ஏற்காததால், சில மறைமுக அழுத்தங்களையும் எடப்பாடிக்கு தர வேண்டிய சூழலும் உருவானதாக தெரிகிறது.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வியூகங்கள்
சேலம் இளங்கோவன் முதல் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் வரை ரெயிடுகள் நடத்தப்பட்டும், எடப்பாடி அசரவேயில்லை. விஜயபாஸ்கர் வரை நெருங்கி வந்துவிட்ட போதும், எடப்பாடி அசரவேயில்லை. இத்தனைக்கும், எடப்பாடியின் தலைக்கு மேல் நிறைய கத்திகள் இன்னமும் தொங்கி கொண்டிருக்கின்றன. அவைகளின் மொத்த பிடியும், பாஜக மேலிடத்தில் உள்ளது என்று தெரிந்தும் எடப்பாடி அசரவில்லை.
மதுரை ஏர்போர்ட்டில் ஓபிஎஸ்ஸுடன் சரிசமமாக நிற்க வைத்து, தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியும், அதை எடப்பாடி கண்டுகொள்ளவில்லை. பாஜக மூத்த தலைவர்கள் முதல் எத்தனையோ பேர் ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு மறைமுக அழுத்தம் தந்தும்கூட எடப்பாடி கண்டுகொள்ளவில்லை. ஒருபக்கம் திமுகவை சமாளித்து கொண்டு, மறுபுறம் டெல்லியை திரும்பி பார்க்க வைக்கும், அரசியலை எடப்பாடி செய்து வருவதை பார்த்து, மேலிடம் சற்று குழம்பித்தான் போனது.
சாதித்த எடப்பாடி பழனிசாமி
கடைசியில் என்ன நினைத்ததோ தெரியவில்லை. 2 நாளைக்கு முன்பு, “இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி” என்ற பெயருடன் G20 கூட்டத்துக்கு அழைப்பிதழை அனுப்பி வைத்துள்ளது. இது ஒருவகையில், எடப்பாடி பழனிசாமியின் ஆளுமையை பாஜகவே ஏற்றுக் கொண்டுவிட்டதற்கான அறிகுறியாக பார்க்கப்பட்டு வருகிறது. மற்றொரு பக்கம், ஓபிஎஸ்ஸுக்கான தோல்வியாகவும் பார்க்கப்படுகிறது.
கைவிடப்பட்ட ஓபிஎஸ்
பாஜகவின் அபிமானியாக இருந்தும் கூட, ஓபிஎஸ் கைவிடப்பட்டுவிட்டாரோ என்ற சந்தேகமும் எழுகிறது. ஓபிஎஸ்ஸுக்கு பிரதான ஆதரவு கூட்டம் இல்லை என்றாலும், தனக்கான “முக்கியத்துவத்தை” ஒவ்வொரு முறையும் அவர் தவறிவிட்டு விடுகிறாரோ? என்ற சந்தேகமும் எழுகிறது.. உண்மையை சொல்லப்போனால், ஆரம்பம் முதல் ஓபிஎஸ்ஸுக்கு உறுதுணையாக இருந்து பாஜக தான் என்பதை மறுக்க முடியாது.
ஆனால், கோவை செல்வராஜ் போன்ற மிக முக்கியமான நிர்வாகியை, ஓபிஎஸ்ஸால் தக்க வைக்க முடியாமல் போனது வருத்தமே. எனினும், பாஜகவின் அபிமானத்தை பெறுவதற்கு, வேறு சில வித்தைகளையும் கற்க வேண்டி உள்ளது. அதை தான் எடப்பாடி பழனிசாமி நிரூபித்து வருவதாக தெரிகிறது. பாஜகவிடம் எடப்பாடி பணிவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசியில், எடப்பாடி பழனிசாமியிடம் தான், பணிந்தது என்னவோ பாஜகவாகத்தான் இருக்கிறது போலும்..!