விடாப்பிடியாக கறார் காட்டும் எடப்பாடி பழனிசாமி! அப்செட்டில் பாஜக

Photo of author

By Anand

விடாப்பிடியாக கறார் காட்டும் எடப்பாடி பழனிசாமி! அப்செட்டில் பாஜக

 

ஓ.பன்னீர்செல்வத்துடன் மீண்டும் இணைந்து செயல்பட முடியவே முடியாது என, எடப்பாடி பழனிசாமி கறாராக தெரிவித்துள்ளது, பாஜக மேலிடத் தலைவர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது என்று கூறப்படுகிறது.

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு உட்கட்சி பிரச்சனைகள் நிலவி வருகிறது.அவைகளையெல்லாம் மீறி தற்போது அக்கட்சியில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாக மாறியுள்ளது.

 

அந்த வகையில் அதிமுகவில் ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஒற்றைத் தலைமை உருவாகியுள்ளது. கடந்த ஜூலை மாதம் 11 ஆம் தேதி, சென்னை வானகரத்தில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

 

இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அதே நாளில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர்.இதனைத்தொடர்ந்து இந்த சம்பவத்தால் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தேர்தல் ஆணையம், நீதிமன்றம் ஆகியவற்றில் முறையீடு செய்துள்ளார்.

 

தற்போதைய சூழலில் இதுவரை நடைபெற்ற சட்டப் போராட்டங்களில் எடப்பாடி பழனிசாமி தரப்பின் கையே ஓங்கி இருக்கிறது.இதனால் ஓ.பன்னீர்செல்வம் உதவிக்காக மத்தியில் ஆளும் பாஜகவின் தயவை நாடியது. அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பும் உதவி வேண்டி டெல்லி வரை சென்று முக்கிய தலைவர்களை சந்தித்து வந்தனர்.அப்போது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி என இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பாஜக தரப்பில் கேட்டுக் கொண்டதாக கூறப்பட்டது.

 

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துடன் மீண்டும் இணைந்து பணியாற்ற முடியவே முடியாது என, தனக்கு நெருக்கமான ஆதரவாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கறாராக தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது தங்களுடைய அரசியல் எதிரியான திமுகவுடன் நெருக்கம் காட்டும் ஓ.பன்னீர்செல்வத்துடன் மீண்டும் எப்படி இணைந்து பணியாற்ற முடியும்? என அவர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

 

குறிப்பாக தங்கள் பக்கம் பெரும்பாலான எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆதரவு இருக்கையில், நாம் எதற்கும் இறங்கி போக வேண்டாம் என்று, எடப்பாடி பழனிசாமி கறாராக கூறியதாகவும் தெரிகிறது.

 

இந்நிலையில் விரைவில் 2024 ஆம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற மத்தியில் ஆகும் பாஜக முயற்சித்து வருகிறது.ஏற்கனவே நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுவுடன் கூட்டணி அமைத்து குறிப்பிட்ட சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக பெற்றுள்ளது. அதே போல அடுத்து வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டு வருகிறது.

 

இந்நிலையில் தமிழகத்தில், பிரதான கட்சியான அதிமுக, இரண்டு அணிகளாக பிளவுபட்டு இருப்பதால், தாங்கள் எதிர்பார்த்தது போல் நடக்காதது என டெல்லி பாஜக மேலிடத் தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒருங்கிணைந்த அதிமுகவையே பாஜக மேலிடம் விரும்புவதால்,இது குறித்து அறிவுறுத்திய பின்னரும் எடப்பாடி பழனிசாமி இப்படி விடாப்பிடியாக கறாராக இருப்பது, அவர்களை அப்செட் ஆக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.