மோர்தானா அணையில் யானை மூழ்கி உயிரிழப்பு… குடியாத்தம் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது…
குடியாத்தம் பகுதியில் உள்ள மோர்தானா அணையில் யானை மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் எல்லையில் ஆந்திர வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதியில் கவுண்டன்யா யானைகள் சரணாலயம் இருக்கின்றது. கவுண்டன்யா சரணாலயத்தில் 40க்கும் மேற்பட்ட யானைகள் இருக்கின்றது. கவுண்டன்யா சரணாலயத்தில் உள்ள யானைகள் பல குழுக்களாக பிரிந்து தமிழகத்தில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது.
குடியாத்தம் பகுதியில் உள்ள மோர்தானா அணையில் தண்ணீர் முழு கொள்ளளவில் உள்ளது. மோர்தானா அணையின் கடைசி பகுதியில் இருந்து மறுபக்கத்திற்கு யானைகள் கூட்டம் கூட்டமாக செல்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று(ஆகஸ்ட்20) மாலையில் மோர்தானா அணையில் குட்டியானை ஒன்று இறந்து மிதந்து கிடந்தது. குட்டியானை இறந்து மிதந்து கொண்டிருப்பதை பார்த்த ஆடு மாடு மேய்ப்பவர்கள் வனத்துறைக்கும் வருவாய்த்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் நேற்று இரவு குட்டி யானை இறந்து மிதந்து கொண்டிருந்த பகுதிக்கு செல்ல முயற்சி செய்தனர். ஆனால் அந்த பகுதியில் காட்டு யானைகள் சுற்றித் திரிவதை பார்த்த வனத்துறையினர் திரும்பி வந்துவிட்டனர்.
இதையடுத்து இன்று(ஆகஸ்ட்21) குடியாத்தம் வனச்சரக அலுவலர் வினோபா அவர்களின் தலைமையில் மீண்டும் வனத்துறையினர் குட்டியானை இறந்து மிதந்து கொண்டிருந்த பகுதிக்கு சென்றனர். அப்பொழுது குட்டி யானை கரை ஒதுங்கியது. பின்னர் இறந்து கிடந்த குட்டியானைக்கு கால்நடை மருத்துவர் கொண்டு மோர்தானா அணையின் கரைப் பகுதியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
யானை எந்த காரணத்தினால் உயிரிழந்தது என்பது குறித்து பிரேத பரிசோதனையின் முடிவுகள் வெளியான பிறகு தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.