இபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு! ஓபிஎஸ் கோரிக்கை ஏற்பு!
அதிமுக வில் ஒற்றை தலைமை என்ற பெயர் எடுத்தவுடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்து விட்டனர். ஆனால் பெரும்பான்மையான ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு அமைந்தது. மேலும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கட்சி தலைமையகத்தை தாக்கியது கட்சிக்குள் பெரிய விரிசலை ஏற்படுத்தியது. அதன்பிறகு நீதிமன்றத்தின் உத்தரவின் படி தலைமையகத்தின் சாவி எடப்பாடியிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் அனுமதியுடன் தான் பொதுக்குழு கூட்டம் நடைபெற வேண்டும். அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் என்பதால் அவரிடம் அனுமதி பெறாமல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும் அதிமுக கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே ஓபிஎஸ் மற்றும் அவர் ஆதரவாளர்களை நீக்கினர்.
இவ்வாறு பொதுக்குழு கூட்டம் தன் அனுமதி இன்றி நடைபெற்றதாகவும் அதில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வு செய்தது ஒப்புக்கொள்ள முடியாது எனக்கூறி உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு கூட்டம் நடைபெற வேண்டும். அந்த வகையில் இணை ஒருங்கிணைப்பாளரான பன்னீர் செல்வத்தின் அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனையடுத்து ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை செயல்படுத்த வேண்டும் என பேட்டியளித்தார். இதற்கு முற்றிலுமாக எடப்பாடி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இத்தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி அவர்கள் மேல்முறையீட்டு வழக்கு தொடுத்தார். வழக்கு விசாரணை இன்று நடைபெற இருந்தது. இதற்கிடையே ஓபிஎஸ் தரப்பினர் விசாரணையினை ஒத்திவைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் இபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு வரும் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.