சசிகலா நடிப்புக்கு ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.!!

0
85

ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா மரியாதை செலுத்தியது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் வி.கே.சசிகலா கண்ணீர்மல்க மரியாதை செலுத்தினார். சென்னை தி.நகர் இல்லத்தில் இருந்து காரில் அதிமுக கொடியுடன் சென்று சசிகலா கண்ணீருடன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அண்ணா திமுக முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்ட 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாளை அதிமுக சார்பில் 50வது ஆண்டு பொன் விழா தொடங்கப்பட உள்ள நிலையில் இன்று நினைவிடம் சென்று மரியாதை செலுத்தியது அதிமுகவினரிடையே இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சசிகலா சென்றது குறித்து செய்தியாளர் சந்திப்பில், பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ‘யானை பலம் கொண்ட அதிமுகவை ஒரு கொசு தாங்கிக் கொண்டு இருப்பதாக கூறுவது நகைச்சுவை’ என்றும் ‘சசிகலா நடிப்பிற்கு ஆஸ்கர் அவார்டே கொடுக்கலாம்’ எனவும் விமர்சித்துள்ளார்.

மேலும், தமிழக மக்கள் ஒருநாளும் விருது தர மாட்டார்கள், ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான பேர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் சென்று வருகிறார்கள். அவர்களில் சசிகலாவும் ஒருவர் என்று சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான் இதனால் பெரிய தாக்கமோ எந்தவிதமான ஒரு விஷயமும் நடக்கப்போவதில்லை.

அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை. அமமுகவில் இடம் தந்தால் ஆட்சேபமில்லை. அதிமுக கட்சி கொடியை பயன்படுத்துவதற்கு எந்த உரிமையும் கிடையாது. கொடியை பயன்படுத்தியது சட்டத்தை மீறுவது இது மிகப்பெரிய தவறு. ஏற்கனவே, பல்வேறு முறை கண்டனத்தை தெரிவித்து உள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.