மாணவர்களுக்கு அடுத்த மாதத்திலிருந்து தேர்வுகள் நடத்தப்படும்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!
கொரோனா தொற்று பரவல் அச்சத்தின் காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கொரோனா தொற்றின் பாதிப்பு சற்று குறைந்து வந்ததன் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து சில கட்டுப்பாடுகளுடன் 9 முதல் 12 ம் வகுப்புகளும் மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து ஒன்று முதல் எட்டாம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சில கட்டுப்பாடுகளுடன் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்த சூழலில் நாட்டில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றின் பாதிப்பு வேகமாக அதிகரிக்க தொடங்கியது.
எனவே, தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலன் கருதி இந்த மாதம் இறுதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனால் மாணவர்களின் கல்வி குறித்தான பயத்திலும், மாணவர்களின் தேர்வு பற்றிய குழப்பத்திலும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இருந்து வந்தனர். இந்த சூழ்நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்த அறிவிப்பு ஒன்றை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ளார்.
அதில், கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 20-ம் தேதிக்குள் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும் என்றும், ஆன்லைன் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கிராமப்புற மாணவர்கள் அப்லோட் செய்த விடைத்தாள்கள் வந்து சேர்வதற்கு தாமதமானாலும் அது பெற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து இறுதி செமஸ்டர் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஆப்லைன் மூலமாகவே தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி செமஸ்டர் தேர்வர்களுக்கான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.