ஆனந்தராஜை வில்லனா பார்த்திருப்பீங்க காமெடியனா பார்த்திருப்பீங்க…. ஹீரோவா பாத்திருக்கீங்களா?
நடிகர் ஆனந்தராஜ் , 80 காலகட்டங்களில் பல படங்களில் வில்லனாக நடிக்க தொடங்கியவர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். அந்த வகையில் பொள்ளாச்சி மாப்பிள்ளை, பெரியண்ணா, பாட்ஷா, சூர்ய வம்சம், சிம்ம ராசி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார். இவர் ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், அர்ஜுன், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது இவர் காமெடியனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் ஆனந்தராஜ் சத்தம் இல்லாமல் ஐந்திற்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
தம்பி ஊருக்கு புதுசு
கடந்த 1991 ஆம் ஆண்டு ஆனந்தராஜ் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் தான் தம்பி ஊருக்கு புதுசு. இந்தப் படத்தை உமாசங்கர் இயக்கியிருந்தார். இதில் ஆனந்தராஜுடன் இணைந்து செல்வா நடித்திருந்தார்.
அதன் பிறகு ஒரே ஆண்டில் 4 படங்களில் ஹீரோவாக நடித்தார்.
கவர்மெண்ட் மாப்பிள்ளை
கடந்த 1992 இல் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான கவர்மெண்ட் மாப்பிள்ளை திரைப்படத்தில் ஆனந்தராஜ் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தில் கஸ்தூரி, மணிவண்ணன், பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
டேவிட் அங்கிள்
அதே ஆண்டில் இயக்குனர் குணா இயக்கத்தில் டேவிட் அங்கிள் எனும் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் சிவரஞ்சனி, ரேகா ஆகியோர் இவருடன் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஆதித்யன் இசையமைத்திருந்தார்.
கிழக்கு வெளுத்தாச்சு
இயக்குனர் தளபதி இயக்கிய கிழக்கு வெளுத்தாச்சு எனும் திரைப்படத்திலும் ஆனந்தராஜ் ஹீரோவாக நடித்திருந்தார். ஐஸ்வர்யா, ராஜா, சில்க் ஸ்மிதா, செந்தில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
போக்கிரி தம்பி
செந்தில்நாதன் இயக்கத்தில் போக்கிரி தம்பி திரைப்படமும் கடந்த 1992 இல் தான் வெளியானது. இதிலும் ஆனந்தராஜ் ஹீரோவாக நடித்திருந்தார் இவருக்கு ஜோடியாக காவேரி நடித்திருந்தார். மேலும் விஜயகுமார் மற்றும் ஜனகராஜ் ஆகியோரும் நடித்திருந்தனர்.
ராஜாங்கம்
இந்த படம் கடந்த 1994 இல் வெளியானது. இதனை சிராஜ் என்பவர் இயக்க ஆனந்தராஜ் கதாநாயகனாக நடித்திருந்தார். இவருடன் இணைந்து வினோதினி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
புதிய ஆட்சி
1995இல் வேலு பிரபாகரன் இயக்கத்தில் புதிய ஆட்சி எனும் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் ஆனந்தராஜ் கதாநாயகனாக நடிக்க இவருடன் இணைந்து ராதிகா, சரத் பாபு மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு ஷியாம் இசை அமைத்திருந்தார்.
ஆனந்தராஜ் ஹீரோவாக நடித்த ராஜாங்கம், கவர்மெண்ட் மாப்பிள்ளை, கிழக்கு வெளுத்தாச்சு, தம்பி ஊருக்கு புதுசு, போக்கிரி தம்பி உள்ளிட்ட 5 படங்களிலும் இருக்கும் ஒற்றுமை என்னவென்றால் இந்த 5 படங்களுக்குமே இசையமைப்பாளர் தேவா தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.