பிரண்டை துவையல் செய்வது எப்படி?
மலிவாக கிடைக்கும் பிரண்டையில் பல மருத்துவ பலன்கள் நிறைந்துள்ளன. பிரண்டையை சாப்பிட்டு வந்தால், அவை உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கும் மேலும், இரத்த மூலம், வயிற்றுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும். உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவி செய்யும். ஞாபக சக்தி பெருகும், மூளை நரம்புகளும் பலப்படும். பிரண்டைத் துவையல் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால், எலும்புகள் உறுதியாகும். எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாகக் கூடவும் பிரண்டை உதவி செய்யும்.
சரி வாங்க.. எப்படி பிரண்டை துவையல் செய்யலாம் என்று பார்ப்போம் –
தேவையான பொருட்கள்:
பிரண்டை – 2 கட்டு
உளுத்தம்பருப்பு – 4 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 20 பல்
இஞ்சி – 2 துண்டு
காய்ந்த மிளகாய் – 8
தேங்காய் – 2 துண்டு
புளி – தேவைக்கேற்ப
நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப
பெருங்காயத்தூள் – கோல் ஸ்பூன்
செய்முறை:
முதலில் பிரண்டையை தோலை நீக்கி, சுத்தம் செய்து நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி, அதில், உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர், அதில், பூண்டு, இஞ்சி, புளி, பெருங்காயத்தூள், தேங்காய் என ஒவ்வொன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதன் பின்னர், பிரண்டையை போட்டு நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு, ஒரு மிக்ஸியில் தேங்காய் மற்றும் வதக்கி வைத்த அனைத்து பொருட்களையும் போட்டு சூடு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, அரைத்து வைத்த விழுதை சேர்த்து கலந்தால் சுவையான பிரண்டை துவையல் தயார்.