குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடனடி சக்தி தரும் சுவையான சத்துமாவு தயார் செய்வது எப்படி?

0
50

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடனடி சக்தி தரும் சுவையான சத்துமாவு தயார் செய்வது எப்படி?

அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் அதிக சத்துக்கள் நிறைந்த தானியங்கள்,பருப்பு வகைகள் அனைத்தையும் சேர்த்து அரைக்கும் ஆரோக்கியமான மாவை சத்துமாவு என்று கூறுகிறோம்.இன்றைய கால சூழலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாய்க்கு ருசியான உணவுகளை சுவைத்து பழகி விட்டதால் அதிக சத்துக்கள் நிறைந்த சுவை குறைவாக இருக்கும் உணவுகளை உண்ண விருப்பம் காட்டாமல் வருகிறார்கள்.இதன் காரணமாக வயதான காலத்தில் கடுமையான பின் விளைவுகளை நாம் சந்திப்போம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ராகி,கம்பு உள்ளிட்ட சத்து நிறைந்த தானியங்களை தினமும் சமைத்து சாப்பிடுவது என்பது பலருக்கும் முடியாத காரியமாக உள்ளது.இவற்றை தனித்தனியாக சமைத்து சாப்பிடுவதை காட்டிலும் ஒன்றாக அரைத்து சேர்த்து பானமாக குடித்து வந்தோம் என்றால் கூடிய விரைவில் சோர்வான உடலும் தெம்பு பெறும்.உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்திகள் கிடைத்து உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.இந்த சத்து மாவில் அதிகளவில் நார்ச்சத்து,தாதுக்கள், வைட்டமின்கள்,நல்ல கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றன.

தேவையான பொருட்கள்:-

*ராகி – 1 கப்

*கம்பு – 1/2 கப்

*வேர்க்கடலை – 1/4 கப்

*பாதம் பருப்பு – 1/4 கப்

*சோளம் – 1/2 கப்

*தினை அரிசி – 1/2 கப்

*கோதுமை – 1/2 கப்

*கருப்பு கொண்டக் கடலை – 1/2 கப்

*பச்சைப்பயறு – 1/2 கப்

*துவரம் பருப்பு – 1/2 கப்

*பொட்டுக்கடலை – 1/2 கப்

*வெள்ளை எள் – 1/2 கப்

*கருப்பு உளுந்து – 1/2 கப்

*கொள்ளு – 1/2 கப்

*பிஸ்தா – 1/4 கப்

*முந்திரி – 1/4 கப்

செய்முறை:-

அடுப்பில் கடாய் வைத்து அதில் மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை மிதமான தீயில் தனி தனியாக வறுத்து எடுத்து ஆற வைத்து கொள்ள வேண்டும்.பிறகு நன்கு பவுடர் போல் அரைத்து எடுத்து அதனை ஆற வைத்து பிறகு ஒரு டப்பாவில் சேமித்து கொள்ள வேண்டும்.

சத்துமாவு கஞ்சி செய்முறை:

1.ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி சத்துமாவு பவுடர் மற்றும் 1 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து கொள்ள வேண்டும்.

2.அடுப்பில் மிதமான தீயில் அந்த பாத்திரத்தை வைத்து கைவிடாமல் கிண்ட வேண்டும்.சத்துமாவு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

3.நாட்டு சர்க்கரை,கருப்பட்டி,பனைவெல்லம் இதில் ஏதேனும் ஒன்றை தேவைக்கேற்ப சேர்த்து நன்கு கலக்கி விட வேண்டும்.

4.அடுப்பை அணைத்த பிறகு காய்ச்சிய பால் 100 ml சேர்த்து கலக்க வேண்டும்.டீ,காபிக்கு பதிலாக இந்த சத்துமாவு கஞ்சை பருகி வந்தோம் என்றால் உடல் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.