29 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் சிறையிலிருந்து இந்தியர் விடுதலை – குடும்பத்தினர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி

0
86

29 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் சிறையிலிருந்து இந்தியர் விடுதலை – குடும்பத்தினர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி

எல்லை தாண்டியதாக பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இந்தியர் 29 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்.

காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டத்தை சேர்ந்தவர் குல்தீப் சிங். இவர் கடந்த 1992ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் எல்லையை கடக்க முயன்றுள்ளார். அப்போது பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் அவரை கைது செய்துள்ளனர். பின்னர் அவர் உளவாளி என கருதி விசாரணை செய்து இறுதியில் அவருக்கு 29 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து அவர் அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி அவர் அந்நாட்டு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் வாகா வழியாக இந்தியாவிற்கு வந்தார். வந்த அவரை, அவரது குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

சிறையில் இருந்தது குறித்து குல்தீப் சிங் கூறும்போது, எதிர்பாராத விதமாக எல்லையை கடந்த போது ராணுவத்தினர் என்னை கைது செய்ததாகவும், உளவாளியை விசாரிப்பது போல் உடலில் மின்சாரம் செலுத்தியும், அடித்தும், கொடூரமான சித்ரவதைகளை செய்தனர் என்றும் அவர் கூறியுள்ளார். இருந்தாலும் நான் நம்பிக்கையை இழக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், சிறையில் தன்னுடன் இருந்த 10க்கும் மேற்பட்ட இந்தியர்களை சித்ரவதை செய்ததாகவும் அதனால் அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனிடையே நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களை மனிதாபிமான முறையில் விடுதலை செய்ய கோரிக்கை வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.