கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதனால் பல நாடுகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. மேலும் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் காரணமாக ஆண்டு தோறும் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரும் தேதி தள்ளிவைக்கப்பட்டது. கொரோனாவின் தாக்கம் அதிகமானதால் ஐபிஎல் தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தொடர்ந்து முயற்சி செய்து இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றன.
அங்கு கடந்த வாரம் நடைபெற்ற கொரோனா பரிசோதனையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் விலகியுள்ளது. ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்வது எந்த அணி என்று கேள்வி குறியாக இருந்தது. இந்நிலையில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை நேருக்குநேர் எதிர்கொள்வது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி என்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.