ரயிலில் பயணம் செய்வது என்றால் பலருக்கும் பிடிக்கும், கழிப்பறை வசதி, படுத்துக்கொள்ளும் வசதி என ரயில் பயணம் ஒரு சிறந்த சொகுசு பயணமாக இருக்கிறது. ரயில்வே நிர்வாகம் தனது பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு அடிக்கடி மாற்றங்களை செய்து வரும் நிலையில் தற்போது ரயில்வே ஒரு பெரிய மாற்றத்தை செய்துள்ளது. பயணிகளின் தூக்கம் கெடாமல் இருக்கவும், பயணத்தின் போது பயணிகள் நிம்மதியான உறக்கத்தை பெறவும் ரயில்வே நிர்வாகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
ரயில்வேயின் புதிய விதிகளின்படி, இனிமேல் இரவில் பயணம் செய்யும் நீங்கள் உங்கள் இருக்கை, பெட்டியில் எந்தப் பயணிகளும் மொபைலில் சத்தமான குரலில் பேசவோ, சத்தமாக பாடல்களைக் கேட்கவோ கூடாது என்று கூறியுள்ளது. ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் பெரும்பாலும் அடுத்தவருக்கு இடையூறு தரும் வகையில் செல்போனில் சத்தமாக பேசுகின்றனர், நண்பர்களாகவோ அல்லது குடும்ப உறுப்பினர்களுடனோ பயணம் செய்பவர்கள் சத்தமாக பேசி சிரித்துக்கொண்டு வருவதை நாம் பார்த்து இருக்கிறோம். சிலர்
வெகுநேரம் வரை சத்தமாக பாடல்களைக் கேட்பதாகவும் அடிக்கடி புகார் எழுந்து வந்த நிலையில் ரயில்வே நிர்வாகம் இந்த முடிவை எடுத்திருக்கிறது.
புதிய விதியின்படி ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் இரவு 10 மணிக்கு மேல் மொபைலில் சத்தமாக பேசுவது, சத்தமாக பாடல்கள் கேட்பது, இரவு 10 மணிக்கு மேல் மின்விளக்குகளை எரிய விடுவது போன்ற செயல்களை செய்யக்கூடாது என்றும் அப்படி செய்வதாக பயணிகள் மீது புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.