கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்த ஜெயலலிதா…. எந்த படத்தில் தெரியுமா!
சினிமாவை பொருத்தவரையில் பல விஷயங்களை நாம் தினமும் ஊடகங்களின் மூலம் தெரிந்து கொண்டாலும் தெரியாத விஷயங்கள் பலவும் இருக்கின்றன. அந்த வகையில் தான் தற்போது கமல்ஹாசனுக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்த படம் ஒன்றை பற்றி பார்க்கலாம்.
உலக நாயகன் கமல்ஹாசன் திரை உலகில் ஆறு வயதிலிருந்தே நடிக்க தொடங்கியவர். 6 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் திரைத் துறையில் தற்போது வரை தனது நடிப்பு திறமைக்காக மட்டுமல்லாமல் பல்வேறு பிரிவுகளின் கீழ் பல விருதுகளை அள்ளி இருக்கிறார்.
மறைந்த முன்னாள் முதல்வரும் பிரபல நடிகையுமான ஜெயலலிதா, கடந்த 1961 ஆம் ஆண்டு முதல் திரை வாழ்க்கையை தொடங்கியவர். ஜெயலலிதா, கிட்டத்தட்ட 127 படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் ஆயிரத்தில் ஒருவன், குமரிப்பெண், குடியிருந்த கோயில், காவல்காரன், அடிமைப்பெண், தேடி வந்த மாப்பிள்ளை என பல படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கைவசம் வைத்திருந்தார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். அதே சமயம் சிறந்த நடிகைக்கான விருதுகளை வென்றது மட்டுமல்லாமல் பல படங்களில் பாடல்களும் பாடியிருக்கிறார் ஜெயலலிதா.
ஜெயலலிதா, தமிழில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், முத்துராமன், சிவகுமார், ஜெய்சங்கர் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். எம்ஜிஆர் உடன் மட்டுமே 28 படங்களில் நடித்திருக்கிறார்.
இதற்கிடையில் தான் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து ஐந்து படங்களில் பணியாற்றி இருக்கிறார். அன்னை வேளாங்கண்ணி, அன்பு தங்கை, சினிமா பைத்தியம், உன்னை சுற்றும் உலகம், சூரியகாந்தி உள்ளிட்ட ஐந்து படங்களில் கமல்ஹாசனும் ஜெயலலிதாவும் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். அதாவது கமல்ஹாசன் ஜெயலலிதாவுடன் இணைந்து நடிகராகவும் நடன இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்.
அதில் குறிப்பாக கடந்த 1974 ஆம் ஆண்டு எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் வெளியான அன்பு தங்கை படம் வெளியானது. இந்த படத்தில் முத்துராமன் கதாநாயகனாக நடிக்க ஜெயலலிதா கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற ‘மன்னன் வணங்கும் ‘ எனும் பாடல் ஒன்றுக்கு கமல்ஹாசனுக்கு ஜோடியாக ஜெயலலிதா நடனமாடி இருப்பார். கமல்ஹாசன் இதில் புத்தராக சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அவரை நேசிக்கும் பெண்ணாக ஜெயலலிதா நடித்திருந்தார். இந்தப் படத்தில் சுவாரசியமான தகவல் என்னவென்றால், இதில் ஜெயலலிதாவிற்கு நடனம் கற்றுக் கொடுத்தது கமல்ஹாசன் தான். அதுமட்டுமில்லாமல் அந்த சமயத்தில் கமல்ஹாசனுக்கு 20 வயது என்பதும் ஜெயலலிதாவிற்கு 26 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது.