கேரளா ஸ்டைல் கோழிக் குழம்பு – இப்படி செய்தால் செம்ம டேஸ்ட்டாக இருக்கும்..!!
நம்மில் பலருக்கு அசைவம் என்றால் அலாதி பிரியம். அதிலும் அசைவ உணவு பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது கோழி தான். இந்த கோழி இறைச்சியில் செய்யப்படும் அனைத்து உணவுகளும் ருசியாக இருக்கும். அதிலும் குழம்பு செய்து சாப்பிட்டால் பிரமாதமாக இருக்கும்.
இந்த கோழிக் குழம்பை கேரளா ஸ்டைலில் செய்வது குறித்த தெளிவான செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.
தேவையான பொருட்கள்:-
*கோழி இறைச்சி – 1/2 கிலோ
*பூண்டு – 5 பல்
*இஞ்சி – 1 துண்டு
*மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
*முந்திரி பருப்பு – 10
*இலவங்கம் – 4
*தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
*மிளகுத்தூள் – 1 1/2 தேக்கரண்டி
*பட்டைத் துண்டு – 2
*சின்ன வெங்காயம் – 1/2 கப் (நறுக்கியது)
*பச்சை மிளகாய் – 2
*உப்பு – தேவையான அளவு
*தேங்காய் பால் – 200 மில்லி
*கறிவேப்பிலை – 2 கொத்து
செய்முறை:-
முதலில் 1/2 கிலோ சிக்கனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
அடுத்து அடுப்பில் குக்கரை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். அவை சூடேறியதும் பட்டை, கிராம்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்.
அடுத்து நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு மற்றும் இஞ்சி துண்டுகளை சேர்த்துக் கொள்ளவும். இந்த கலவை மென்மையாகும் வரை வதக்கவும். அடுத்து சிறிதளவு மஞ்சள் தூள், மிளகுத் தூள் சேர்த்து கிளறி விவும். பின்னர் வெட்டி வைத்துள்ள கோழி துண்டுகளை சேர்த்து வதக்கி விடவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
அடுத்து தேங்காய்ப்பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடவும். 1 விசில் வந்ததும் குக்கரை இறக்கவும்.
அடுத்து அடுப்பில் தாளிப்பு கரண்டி வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். அவை சூடேறியதும் முந்திரி, கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும். இதை வேக வைத்துள்ள சிக்கனில் கலந்து கொள்ளவும். இந்த கோழி குழம்பு, ஆப்பம், இடியாப்பம் போன்றவைகளுக்கு சிறந்த காமினேஷனாக இருக்கும்.