Kerala Style Recipe: கேரளா ஸ்டைல் வெண்டைக்காய் குழம்பு – செய்வது எப்படி?
வெண்டைக்காய் அனைவருக்கும் பிடித்த காய்கறிகளில் ஒன்றாகும். இந்த வெண்டைக்காயில் ப்ரை, பிரட்டல், பொரியல், பச்சடி என்று பல உணவு வகைகள் செய்து உண்ணப்படுகிறது. அந்த வகையில் வெண்டைக்காய் வைத்து குழம்பு செய்யும் முறை கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த வெண்டைக்காய் குழம்பு கேரளா முறைப்படி தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி சமைத்தால் அதிக ருசியுடன் இருக்கும்.
தேவையான பொருட்கள்:-
*வெண்டைக்காய் – 200 கிராம் (நறுக்கியது)
*கொத்தமல்லி விதை – 5 தேக்கரண்டி
*வெந்தயம் – 1 தேக்கரண்டி
*தேங்காய் துருவல் – 1 கைப்பிடி அளவு
*வர மிளகாய் – 6
*தேங்காய் எண்ணெய் – 5 முதல் 6 தேக்கரண்டி
*கருவேப்பிலை – 1கொத்து
*சின்ன வெங்காயம் – 1/2 கப்
*பூண்டு – 8 பற்கள்
*பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
*புளிக்கரைசல் – 1/2 கப்
*மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
*உப்பு – தேவையான அளவு
செய்முறை:-
பவுலில் 1 பெரிய எலுமிச்சம் பழ அளவு புளி சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளவும்.
அடுத்து 10 முதல் 12 வெண்டைக்காயை மீடியம் சைஸில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் 1/2 தேக்கரண்டி அளவு வெந்தயம் சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பை அணைத்து ஆற விடவும்.
அடுத்து உரலில் வறுத்து ஆறவைத்துள்ள வெந்தயத்தை சேர்த்து இடித்து பொடியாக்கி கொள்ளவும்.
10 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்து தட்டிக் கொள்ளவும். அதேபோல் 8 பல் பூண்டை தோல் நீக்கி கொள்ளவும்.
அடுத்து 1/2 மூடி தேங்காயை துருவல் கொண்டு துருவிக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலி வைத்து துருவி வைத்துள்ள தேங்காயை சேர்க்கவும். பின்னர் 6 வர மிளகாய், 5 தேக்கரண்டி அளவு கொத்தமல்லி விதை சேர்த்து மிதமான தீயில் நன்கு வறுத்துக் கொள்ளவும்.
பின்னர் இதை ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் வாணலி வைத்து அதில் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றவும். அவை சூடேறியதும் நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காய் துண்டுகளை போட்டு வறுத்தெடுக்கவும். இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும். பின்னர் கடாயில் 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். அவை சூடேறியதும் அதில் சிறிது வெந்தயம் சேர்த்து பொரிய விடவும்.
அடுத்து 1 கொத்து கருவேப்பிலை மற்றும் இடித்து வைத்துள்ள பூண்டு சேர்த்து வதக்கவும். தொடர்ந்து 8 பல் பூண்டு மற்றும்’சிட்டிகை அளவு பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கவும்.
அடுத்து வறுத்து பொடி செய்து வைத்துள்ள வெந்தயத் தூளை தூள் மற்றும் 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
பின்னர் வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து கிளறி விடவும். வெண்டைக்காய் வதங்கும் தருணத்தில் எடுத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
அதன் பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து விடவும். தேவையான அளவு உப்பு சேர்த்து மீடியம் ப்லேமில் வைத்து மூடி போட்டு கொதிக்க விடவும்.
வெண்டைக்காய் குழம்பில் உள்ள எண்ணெய் பிரிந்து தனியாக வரும் வரை விட்டு அடுப்பை அணைக்கவும். இவ்வாறு செய்தால் வெண்டைக்காய் குழம்பு அதிக சுவையில் இருக்கும்.