தெரிந்து கொள்ளுங்கள்.. புதிய மண் பாத்திரங்களை பழகும் முறை..!
மண் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். நம் முன்னோர்கள் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த மண், இரும்பு, செம்பு பொருட்களை மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் இன்று உணவு பாத்திரமும் மாறிவிட்டது… உணவு பழக்கமும் மாறிவிட்டது. இன்ஸ்டன்ட் உணவுகளின் ஆதிக்கம் அதிகரித்தோடு கூடவே புது புது நோய் பாதிப்புகளும் அதிகரித்து விட்டது.
அலுமினியம், குக்கர் போன்ற பாத்திரங்களை உணவு செய்ய பயன்படுத்தி உடல் நலத்தை கெடுத்துக் கொள்ளாமல் பண்டைய முறையை பின்பற்றுவது நல்லது.
இன்றைய தலைமுறையினர் மண் பாத்திரங்களை பார்த்திருக்க கூட மாட்டார்கள். காலத்திற்கேற்ப மண் பாத்திரங்களும் புது புது வடிவில் மாற்றம் கண்டு விட்டது.
மண் சட்டி, மண் குக்கர், பில்டர், பணியாரக் கல், தோசைக்கல் என வகை வகையான மண் பாத்திரங்கள் உள்ள நிலையில் அதை பயன்டுத்த தெரிந்தால் மட்டுமே எளிதான ஒன்றாக இருக்கும்.
மண் பாத்திரங்கள் பழகும் முறை…
மண் பாத்திரம் வாங்கி வந்ததும் ஒரு வாலி தண்ணீரில் போட்டு ஒரு நாள் ஊற விடவும்.
மறுநாள் சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் ஆறிய நிலையில் இருக்கும் பொழுது அதை மண் பாத்திரத்தில் ஊற்றவும். அதேபோல் அரிசி ஊறவைத்த நீரையும் அதில் ஊற்றி இரு நாட்களுக்கு ஊற விடவும்.
இரண்டு நாட்களுக்கு பின்னர் அந்த தண்ணீரை ஊற்றி விட்டு பிறகு ஒரு தேங்காய் நார் கொண்டு பாத்திரத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
பிறகு மீண்டும் கஞ்சி தண்ணீர் மற்றும் அரிசி ஊறவைத்த நீர் ஊற்றி ஒரு தினம் ஊற விடவும்.
அடுத்த நாள் இந்த நீரை ஊற்றி விட்டு தேங்காய் நார் கொண்டு பாத்திரத்தை தேய்க்கவும். மண் பாத்திரங்களை துலக்கும் பொழுது சோப், லிக்விட் போன்ற எதையும் பயன்படுத்தக் கூடாது.
பாத்திரத்தை சுத்தம் செய்த பின்னர் நல்ல தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் சூடு படுத்தவும். பிறகு இந்த நீரை ஊற்றி விட்டு மண் பாத்திரத்தை சமையலுக்கு பயன்படுத்த வேண்டும்.