உங்கள் சமையலில் உப்பு மற்றும் காரம் அதிகரித்து விட்டது என்ற பதட்டம் இனி வேண்டாம்!! இந்த ட்ரிக்கை பயன்படுத்துங்கள்!!
நாம் உண்ணும் உணவில் உப்பு, புளி, காரம் சரியான அளவில் இருந்தால் தான் உணவு சுவையாக இருக்கும். ஒருவேளை இந்த உப்பு, புளி, காரம் சற்று கம்மியாக இருந்தால் கூட சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் இவற்றை சற்று அதிகமாக சேர்த்துவிட்டால் குழம்பின் சுவை மாறி விடும். இதை சரி செய்யத் தெரியாமல் பலரும் புலம்பி வருகிறோம். அவர்களுக்கு தான் இந்த ட்ரிக்ஸ். இதில் உப்பு, புளி, காரம் அதிகரித்து விட்டால் எவ்வாறு சரி செய்யலாம் என்பது குறித்த தெளிவான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.
*சட்னியில் உப்பு அதிகரித்து விட்டால் எப்படி சரி செய்வது?
நம்மில் பெரும்பாலானோருக்கு சட்னி பிரியமான உணவு வகை ஆகும். இவை இட்லி மற்றும் தோசைக்கு சிறந்த காமினேஷனாகும். இதில் தேங்காய் சட்னி, காரச் சட்னி, பருப்பு சட்னி, வேர்க்கடலை சட்னி என பல வகைகள் இருக்கிறது. இந்த சட்னியில் உப்பு அதிகரித்து விட்டால் கரிப்பு ஏற்பட்டு அவற்றின் சுவை மாறி விடும். இதை சரி செய்ய சிறிதளவு பொட்டுக்கடலையை பொடி செய்து சட்னியில் சேர்த்தால் கரிப்பு குறைந்து விடும்.
*பிரியாணியில் உப்பு மற்றும் காரம் அதிகரித்தால் என்ன செய்வது?
காரம் குறைய:
பிரயாணியில் காரம் அதிகரித்து விட்டால் உலர் திராட்சையை நெய்யில் வறுத்து சேர்த்தால் காரம் குறையும்.
அதேபோல் நாட்டுச் சர்க்கரை, எலுமிச்சை சாறு, வெல்லப்பாகு உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை சிறிதளவு பிரியாணியில் சேர்த்தாலும் காரம் குறையும்.
உப்பு குறைய:
பிரயாணியில் உப்பு அதிகரித்து விட்டால் பெரிய வெங்காயத்தை எண்ணெயில் வதக்கி சேர்த்தால் கரிப்பு தன்மை சரியாகும்.
*ரசத்தில் புளிப்பு சுவை அதிகமானால் என்ன செய்வது?
ரசம் செரிமானத்திற்கு உகந்த ஒரு உணவு ஆகும். இந்த ரசம் அதிக சுவை மற்றும் வாசனை நிறைந்தது என்பதினால் அனைவரும் விரும்பி உண்டு வருகிறோம். புளி சேர்த்து தயாராக்கிப்படும் இந்த ரசத்தில் புளிப்பு சுவை அதிகரித்து விட்டால் ஒரு சிலரால் சாப்பிட முடியாமல் போய்விடும். இந்த ரசத்தில் உள்ள அதிக புளிப்பு சுவை குறைய பருப்பு தண்ணீரை ஊற்றினால் புளிப்பு சரியாகிவிடும்.
*குழம்பு வகைகளில் உப்பு மற்றும் காரம் அதிகரித்து விட்டால் என்ன செய்வது?
கரிப்பு குறைய:
குழம்பில் உப்பு அதிகரித்து விட்டால் பெரிய வெங்காயத்தை எண்ணெயில் வதக்கி சேர்த்தால் கரிப்பு தன்மை சரியாகும்.
அதேபோல் உருளைக்கிழங்கு அல்லது சௌசௌ சிறு சிறு துண்டுகளாக நறுக்கி 5 முதல் 6 என்ற எண்ணிக்கையில் குழம்பில் சேர்த்தால் கரிப்பு தன்மை குறையும்.
காரம் குறைய:
குழம்பில் காரம் அதிகரித்து விட்டால் சுத்தமான தயிர் சிறிதளவு சேர்த்து கலந்து விடவும். அதேபோல் தேங்காயை அரைத்து வடிகட்டினால் தேங்காய் பால் கிடைக்கும். இதை சிறிதளவு குழம்பில் சேர்த்தால் காரம் குறையும்.