ஆரஞ்ச் அலர்ட்.. 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்!!
கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அக்டோபர் மாத இடையில் தொடங்க வேண்டிய பருவமழை சற்று தாமதமாக, மாத இறுதியில் தொடங்கினாலும் பின்னர் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் உள்ளிட்டவைகளால் இடியுடன் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
தமிழகத்தின் குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, அதேபோல் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை வட மற்றும் தென் மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது?
இன்று(நவம்பர் 21): வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, தருமபுரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும்.
நாளை(நவம்பர் 22): சென்னை, திருநெல்வேலி, திருப்பூர், தென்காசி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும்.