மக்கள் கவனத்திற்கு.. அச்சுறுத்தும் டெங்கு!! ஆயிரம் இடங்களில் காய்ச்சல் முகாம்!!
அனைவரையும் ஆட்டி படைத்து வரும் டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தொடர் மழை காரணமாக டெங்கு கொசு அதிகளவில் உற்பத்தியாகி வருகிறது.தேங்கி நிற்கும் தண்ணீரில் அதிகளவு கொசுப்புழுக்கள் உருவாகி வரும் நிலையில் அதை அப்புறப்படுத்தாமல் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வரும் மாநகராட்சியால் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது.
செப்டம்பர் மாதம் மட்டும் 200க்கும் மேற்பட்டோர் டெங்கு பாதிப்பிற்கு ஆளாகி இருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.அதேபோல் டெங்கு காய்ச்சலால் ஆங்காங்கே உயிரிழப்பும் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பீதியில் இருக்கின்றனர்.
ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கம் குறையாத நிலையில் தற்பொழுது டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது.இந்த டெங்கு காய்ச்சல் பகல் நேரங்களில் கடிக்கும் கொசுக்களால் தான் உருவாகிறது.வீட்டில் கை குழந்தைகள் வைத்திருப்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இருப்பது அவசியம்.
அதேபோல் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் அலட்சியம் காட்டாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.வீட்டில் தண்ணீர் தொட்டிகள்,தண்ணீர் குடங்களை திறந்து வைக்காமல் அதை மூடி வைக்க வேண்டும்.அதேபோல் தேங்கி கிடக்கும் அசுத்தமான தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.டெங்கு கொசுப்புழு உற்பத்தியாக காரணமாக இருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் நாளுக்கு நாள் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் அவற்றை கட்டுப்படுத்தும் விதமாக நாளை அதாவது அக்டோபர் 1 முதல் 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் தெரிவித்து இருக்கிறது.இந்த முகாம் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற இருக்கிறது.