தமிழகத்தில் தொடரும் பெட்ரோல் குண்டு கலாச்சாரம்! பாஜக வகுத்த அதிரடி வியூகம்?

0
92

பெட்ரோல் குண்டு வீசி சம்பவம் குறித்து ஆய்வு செய்வதற்கு தமிழக பாஜகவின் சார்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்றைய தினம் அண்ணாநகையின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

அதன் பிறகு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை கண்டிக்கும் விதமாக மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்துவது தொடர்பாக பாஜக ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் தேசிய புலனாய்வு நிறுவனமான என் ஐ ஏ மற்றும் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கூட்டாக சோதனையை நடத்தினர். இந்த சோதனைக்கு பிறகு பி எஃப் ஐ அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை கண்டிக்கும் விதமாக அந்த அமைப்பினரும், அவர்களின் ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் சென்னை, கோவை போன்ற பகுதிகளில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அதோடு ஹிந்து முன்னணி பிரமுகர்களின் வீடுகள், அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.

ஆகவே பெட்ரோல் குண்டு விச்சு நடந்த பகுதிகளில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக பாஜகவின் சார்பாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சட்டசபை உறுப்பினர்கள் தலைமையில் 8 மாவட்டங்களுக்கான குழுக்களை நியமனம் செய்த அந்த கட்சியின் தலைவர் அண்ணாமலை நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு, கன்னியாகுமரி மற்றும் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் சட்டசபை உறுப்பினர் எம் ஆர் காந்தி தலைமையில் சசிகலா புஷ்பா, பொன் பாலகணபதி, மாணிக்கம். திருச்சி, விழுப்புரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜகவின் சட்டசபை குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ஏஜி சம்பத், மீனாட்சி, தடா பெரியசாமி.

கோவையில் வானதி சீனிவாசன் தலைமையில் கேபி ராமலிங்கம், எஸ் ஆர் சேகர், ஜி கே நாகராஜன். வேலூர், சேலம் சட்டசபை உறுப்பினர் சரஸ்வதி தலைமையில் கார்த்தியாயினி, நரசிம்மன், டெய்சி சரண் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு இன்றைய தினம் சென்று ஆய்வு பணிகளை ஆரம்பிக்கிறார்கள்.

இதற்கு நடுவில் கோவை மாநகர் மாவட்ட பாஜகவின் பொறுப்பாளர் நாகராஜ் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம், நேற்று நடந்தது. பொதுச் செயலாளர் ஏ பி முருகானந்தம், துணைத் தலைவர்கள் கனகசபாபதி, முன்னாள் மாவட்ட தலைவர் நந்தகுமார் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

அதோடு சட்டசபை உறுப்பினர்களின் குழு வழங்கும் அறிக்கையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா விவகாரத்தில் பாஜகவின் மாவட்ட தலைவர் உத்தம பாலாஜியை கைது செய்ததை கண்டித்தும், பாஜகவின் அலுவலகம் மீது பெட்ரோல் கொண்டு வீசியதை கண்டிக்கும் விதமாகவும் அண்ணாமலை தலைமையில் கோவையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அமைதி பூங்கா என்ற தமிழகத்தின் பெருமைக்கு பெட்ரோல் குண்டு முயற்சி நிகழ்வுகள் குந்தகத்தை உண்டாக்கி விடக்கூடாது. பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரத்திற்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் லோக்சபா தேர்தலை மனதில் வைத்து பெரும் மதக் கலவரத்தை தமிழகத்தில் உண்டாக்க திட்டமிட்டு வரும் ஒரு கும்பலின் சதி செயல்களை முறியடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் வாசன் தெரிவித்திருப்பதாவது தவறு செய்து அவர்களை உடனடியாக கண்டுபிடித்து இரும்புக்கரம் கொண்டு காவல்துறை கைது செய்ய வேண்டும். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது ஆட்சியாளர்களின் மெத்தனம் போக்கையே காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.

அதோடு இது தொடர்பாக சசிகலா தெரிவித்ததாவது, பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் விதத்தில் நடைபெறும் செயல்களை அரசு வேடிக்கை பார்க்காமல் பொதுமக்களை அச்சுறுத்தும் விதத்தில் யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜகவின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் மீது கடந்த 2 தினங்களாக ஒரே விதமான தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன. சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.