மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தில் போலீஸ் அராஜகம்
மத்திய அரசை கண்டித்து இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் முன்னறிவிப்பின்றி தடியடி நடத்தி, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் விலைவாசி உயர்வு, வேலையின்மை, ஜிஎஸ்டி போன்றவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. மேலும், நாடு முழுவதும் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மத்திய அரசின் அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டமும், ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்பட்டது.

சென்னை, மதுரை, கடலூர், கோவை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற போராட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் பங்கேற்றனர். இப்போராட்டத்தின் போது கடலூர் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் காவல் துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து, காவல்துறையினர் முன்னறிவிப்பின்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி வன்முறையை கட்டவிழ்த்தனர். இந்த தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்குதலில் உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி அராஜகத்தில் ஈடுபட்டார். அவர் உள்ளிட்ட காவல்துறையினர் சிலர் நடத்திய தாக்குதலில் திருநாவலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், உளுந்தூர்பேட்டை நகர கமிட்டி உறுப்பினர் சந்திரா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
காவல்துறையின் இந்த அராஜகப் போக்குக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.