தயாரிப்பாளர் ரவீந்தர் மோசடி புகாரில் கைது : காரணம் என்ன?

0
36
#image_title

தயாரிப்பாளர் ரவீந்தர் மோசடி புகாரில் கைது : காரணம் என்ன?

நூதன மோசடியில் ஈடுபட்டும், 16 கோடி ரூபாய் பணமோசடியிலும் ஈடுபட்ட புகாரில் தயாரிப்பாளர் ரவீந்திரனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

2013 ஆம் ஆண்டில், ‘லிப்ரா புரொடக்ஷன்ஸ்’ என்ற பெயரில் ரவீந்தர் அவர்கள், தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை நிறுவினார். இதை தொடர்ந்து, சுப்பு இயக்கிய ‘சுட்ட கதை’ படத்தைத் தயாரித்தார். இது மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது.

பின்னர், அவர் தனது தயாரிப்பு  பேனரில் பல படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். நளனும் நந்தினியும் (2014), கொலைநோக்கு பார்வை (2014), கல்யாணம் (2017), மற்றும் முருங்கைக்காய் சிப்ஸ் ஆகிய  படங்களை தயாரித்தார்.

ரவீந்தர் குறைந்த பட்ஜெட் படங்களை மட்டும் தான் தயாரித்து வந்தார். மேலும், 2022ம் ஆண்டு “மார்க்கண்டேயனும் மகளிர் கல்லூரியும்” என்ற படத்தையும் இயக்கி இயக்குநராகவும் அறிமுகமானார்.

ரவீந்தர் முதலில்  சாந்தி என்பவரை கடந்த 2012 அன்று திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதற்கு பின்னர் பிரபல தொலைக்காட்சி நடிகையான மகாலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், சென்னையை சேர்ந்த பாலாஜி கபா என்பவர், மாதவ் மீடியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் ரவீந்தர் மீது புகார் ஒன்றை அளித்தார். அதில், திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் தனக்கு பல மடங்கு லாபம் கிடைக்கும் என தயாரிப்பாளர் ரவீந்தர் கூறி ஏமாற்றியதாக பாலாஜி குற்றம்சாட்டி உள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து, திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் முதலீடு செய்ய சொல்லி 16 கோடி ரூபாய்க்கு மேல் ரவீந்தர் மோசடி செய்தது நிரூபிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னை அசோக் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தயாரிப்பாளர் ரவிந்தர் அவர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் பல்வேறு நபர்களிடம் இது போன்று மோசடிகளில் ஈடுபட்டதும்; லட்சக்கணக்கில் மோசடி செய்ததும் விசாரணை தெரிய வந்துள்ளது.

தமிழ்த் திரையுலகில் நுழைவதற்கு முன்பு, ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தகம் மற்றும் மேம்பாடு தொடர்பான மாநாட்டில் தொழில்நுட்ப நிபுணராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K