மகளிர் தினத்தை முன்னிட்டு துப்புரவு பணியாளர்களை “திரெளபதி’ படத்திற்கு அழைத்துச் சென்ற ஆளுநர்..!!
புதுச்சேரி: ஒவ்வொரு வருடமும் மார்ச் 8 ஆம் தேதி “உலக மகளிர் தினம்’ சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரியின் ஆளுநர் கிரண்பேடி வித்தியாசமான செயலை செய்து பொதுமக்களை ஈர்த்துள்ளார்.
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் வேலை பார்க்கும் பெண் ‘துப்புரவு பணியாளர்கள்’ அனைவரையும் சமீபத்தில் வெளியாகி மிகப்பெறும் வெற்றியை பெற்ற “திரெளபதி’ திரைப்படத்திற்கு அனுப்பியுள்ளார். இதை மகளிர் தினச் சிறப்பாக கொண்டாடும் வகையில் தனது டுவிட்டரில் பதிவு செய்து மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். ஆளுநர் கிரண்பேடியின் டுவிட்டருக்கு திரெளபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி அந்த பதிவிலேயே நன்றி கூறியுள்ளார்.
புதுவையின் ஆளுநரே மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் அலுவலக பணியாளர்களுக்கு படம் பார்க்க ஏற்பாடு செய்த செயல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆளுநரின் டுவிட்டர் பதிவு சமூகவலைதளங்களில் பலராலும் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றனர்.
இப்படம் கிரவுட் பண்ட்டிங் மூலம் தயாரிக்கப்பட்ட படமாகும். திரெளபதி வெளியாவதற்கு முன்பே பெருமளவு ஆதரவும், சில எதிர்ப்பும் கிளம்பியது. மேலும் அரசியல் சர்ச்சை மற்றும் விமர்சனங்களும் எழுந்தன. டிரெய்லர் மட்டுமே கிட்டத்தட்ட 50 லட்சம் பேர் பார்த்தனர். கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியான இப்படம் தமிழகத்தில் மட்டும் 330 தியேட்டர்களில் வெளியானது மட்டுமல்லாமல் தற்போது கூடுதல் திரையரங்குகளிலும், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும் திரெளபதி வெற்றிநடை போடுகிறாள்.
இப்படத்தை பார்த்த பெருமளவு பொதுமக்கள் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். படத்தின் பட்ஜெட் 50 லட்சம் என்று இயக்குனர் பேட்டியில் கூறியிருந்தார். படம் வெளியாகி இதுவரை
10 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்து வருகிறது. பிரபலம் இல்லாத இயக்குனர், இசையமைப்பாளர், பெரிய நடிகர் நடிகை இல்லாமலே இப்படம் சக்கைபோடு போட்டு வருகிறது. நாடக காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை பல்வேறு அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக பார்த்து வருகின்றனர்.