ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் 25ம் தேதி முதல் கேரளாவில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கேரளாவில் வரும் 31ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாட்டில் உள்ள மலையாளிகள் கேரளா சென்று வருவதற்கு வசதியாக கேரள அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை வரும் 25ம் தேதி முதல் செப் 6ம் தேதி வரை இயக்குகிறது. திருவனந்தபுரம், எர்ணாகுளம், கண்ணூர் ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு பாயிண்ட் டூ பாயிண்ட் பேருந்துகளாக இயக்கப்படுகின்றன.
எர்ணாகுளம், கண்ணூரில் இருந்து புறப்படும் பேருந்துகள் கோயம்புத்தூர் வழியாக செல்கிறது. திருவனந்தபுரத்தில் இருந்து தினமும் மாலை 6 மணிக்கு புறப்படும் இந்தப் பேருந்து நாகர்கோவில் வழியாக சென்னைக்கு செல்கிறது. மீண்டும் சென்னையில் இருந்து மறுநாள் மாலை 5 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் வருகிறது.
இதற்கான டிக்கெட் கட்டணம் 1330 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டிக்கெட்டை ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். தமிழ்நாடு, கேரள அரசுகளின் கொரோனா நிபந்தனைகளுக்கு உள்பட்டே இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இதில் பயணம் செய்யவிருக்கும் பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் மற்றும் தங்கள் செல்போனில் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். கேரளாவுக்கு வருகிறவர்கள் கேரள அரசின் கொரோனா இணையதளத்தில் முன் பதிவு செய்து பயண பாஸ் வாங்க வேண்டும்.
பஸ் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, இந்த பாஸ் இணைத்தால் மட்டுமே டிக்கெட் கிடைக்கும். போதிய பயணிகள் முன்பதிவு செய்யவில்லை என்றால் அந்த டிரிப் ரத்து செய்யப்பட்டு புக் செய்தவர்களின் பயண கட்டணம் திருப்பி செலுத்தப்படும்.