கொரோனா பாதித்த சிங்கங்களை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்!

Photo of author

By Mithra

கொரோனா பாதித்த சிங்கங்களை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது 3.6.2021 அன்று ஆய்வின் மூலம் அறியப்பட்டது. அவற்றில் 9 வயதுள்ள நீலா என்ற பெண் சிங்கம் 3.6.2021 அன்று இறந்தது. ஏற்கனவே ஹைதராபாத் உயிரியல் பூங்கா, ஜெய்பூர் உயிரியல் பூங்கா மற்றும் எட்டாவா (உத்திரபிரதேசம்) சிங்க உலாவிடப் பூங்காக்களில் சிங்கங்களுக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஆய்வுக்காக அனுப்பப்பட்ட 11 சிங்கங்களின் மாதிரிகள் பற்றிய ஆய்வறிக்கை கிடைத்ததன் தொடர்ச்சியாக மேலும் 3 சிங்கம் மற்றும் 4 புலிகளின் மாதிரிகள் விரிவான ஆய்விற்காக இரண்டு நாட்களுக்கு முன் பரோலியில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து சிங்கங்களின் மாதிரிகள் ஹைதராபாத்திலுள்ள செல் உயிரணு மரபியல் மூலக்கூறு மையத்திற்கு அனுப்பப்பட்டு பகுப்பாய்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் தலைவரான முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு சென்றார். அங்கு நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிங்கங்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார்.

உயிரியல் பூங்காவின் இயக்குநர் தெபாஷிஸ் ஜானா, பூங்காவில் எடுக்கப்பட்ட அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கியதோடு, மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவுறுத்துதல்களின்படி நிலைத்த செயல்முறைகளை கவனமாக பின்பற்றப்படுவதையும் குறித்து விளக்கி கூறினார்.

டாக்டர் ஸ்ரீதர் தலைமையிலான பூங்கா மருத்துவக்குழு, பாதிக்கப்பட்ட சிங்கங்களுக்கு வழக்கப்படும் சிகிச்சையின் சாராம்சங்களையும், பிற விலங்குகளுக்கு பூங்காவில் எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பற்றியும் முதலமைச்சருக்கு விளக்கிக் கூறினர்.

இதையடுத்து வன உயிரினங்களின் பாதுகாப்பிற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எவ்வித சுணக்கமுமின்றி மேற்கொள்ள வேண்டும் என்றும், வன உயிரின பூங்காவில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.