மாணவிகள் பள்ளிக்குள் செல்ல அனுமதி மறுப்பு!

Photo of author

By Parthipan K

மாணவிகள் பள்ளிக்குள் செல்ல அனுமதி மறுப்பு!

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவர்கள் சீருடை அணிந்து வர கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியது. இதனிடையே அந்த கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர். எனவே, மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர அக்கல்லூரி முதல்வர் தடை விதித்தார்.

இந்த உத்தரவை மீறி ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்த மாணவிகள் கல்லூரிக்கு வெளியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதை கண்டித்து முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர். மாணவிகளின் இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து மாணவர்கள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 9-ந் தேதி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து கர்நாடகத்தில் உயர்நிலை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளித்து கர்நாடக அரசு கடந்த 10-ந் தேதி உத்தரவிட்டது. இதனால் கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.

இந்த நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கல்லூரி நிர்வாகத்தின் ஆடை கட்டுபாட்டுக்கு தடை விதித்து, முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வர அனுமதிக்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் எந்தவித மத அடையாளங்களையும் வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வர தடை விதித்து இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து கர்நாடக மாநிலத்தில்  மூடப்பட்டு இருந்த உயர்நிலை பள்ளிகள் இன்றுமுதல் மீண்டும் திறக்கப்பட்டன. இதையடுத்து, 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் வகுப்புகளுக்கு வர அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று காலை கர்நாடக மாநிலம் பாண்டியாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் பள்ளிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. மாணவிகளை பள்ளிகளில் விடுவதற்காக பெற்றோர்களும் வந்திருந்தனர். பள்ளிக்குள் சென்றதும் ஹிஜாப்பை அகற்றுவதாக பெற்றோர்கள் கூறினார்கள்.

ஆனால் அதை ஏற்க ஆசிரியர்கள் மறுத்து விட்டனர். ஹிஜாப் அணியாமல் வந்தால் மட்டுமே பள்ளிகளுக்குள் அனுமதிக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதனால் இன்று காலை அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.