பர்தா அணிந்து வந்த மாணவிகள்! சீருடையில் கவனம்!!

Photo of author

By Parthipan K

பர்தா அணிந்து வந்த மாணவிகள்! சீருடையில் கவனம்!!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் மாணவர்கள் அனைவரும் சீருடை அணிந்து வரும்படி கல்லூரி நிர்வாகம் கூறியது. இந்த நிலையில், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர்.

ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகளுக்கு கல்லூரிக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தின் இந்த முடிவை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளின் இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து மாணவர்கள் சிலர் காவித் துண்டு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையான நிலையில், கடந்த 9-ந் தேதி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. எனவே, மாநிலத்தில் பதற்றத்தை தவிர்ப்பதற்காக உயர்நிலை பள்ளிகள் மற்றும்  கல்லூரிகளுக்கு கடந்த 10ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.

இதற்கிடையே, ஹிஜாப் வழக்கு தொடர்பாக இடைக்கால உத்தரவு ஒன்றை கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்தது. அதில், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் ஹிஜாப், காவித் துண்டு என எந்தவித மத அடையாளங்களையும் வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வரக் கூடாது என இடைகால உத்தரவு பிறப்பித்தது.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து, கர்நாடக மாநிலத்தில்  மூடப்பட்டு இருந்த உயர் நிலைப்பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் வகுப்புகளுக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, அம்மாநிலம் உடுப்பி அரசு உயர் நிலை பள்ளிக்கு வந்த மாணவிகள் சிலர் பர்தா அணிந்து வந்தனர். அதேசமயம், பள்ளி வளாகத்துக்குள்தான் மத அடையாளம் சார்ந்த உடைகளுக்கு தடையே தவிர, வெளியே ஹிஜாப், பர்தா போன்றவற்றை மாணவிகள் அணிந்து கொள்ளலாம் என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.