லஞ்சம் வாங்குவதுதான் திமுக கட்சியின் சாதனை! என் மண் என் மக்கள் யாத்திரையில் அண்ணாமலை பேட்டி!
என் மண் என் மக்கள் யாத்திரையின் பொழுது பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் “மத்திய அரசு மக்களுக்காக வழங்கும் இலவச திட்டங்கள் அனைத்துக்கும் திமுக லஞ்சம் வாங்குகின்றது. இது தான் திமுக கட்சியின் சாதனை” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார்.
சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் என் மண் என் மக்கள் யாத்திரை சில நாட்களுக்கு முன்னர் தொடங்கினார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரிஷிவந்தியத்தில் என் மண் என் மக்கள் யாத்திரையை தொடங்கினார்.
அதன் பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை அவர்கள் “சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை ஆகிய பெருநகரங்கள் தமிழகத்தில் மெத்த உற்பத்தி திறனில் 32 சதவீதம் பங்கு வகிக்கிறது. ஆனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் பகுதி முழுக்க முழுக்க கிராமப்பகுதி. இது போன்ற கிராமப் பகுதிகள் வளர்ச்சி பெறாமலேயே இருக்கின்றது.
இங்குள்ள குழந்தைகள் படித்து முடித்து பிறகு அவர்கள் வேலைக்காக சென்னை, கோவை போன்ற வெளியூர்களுக்கும் வெளி நகரங்களுக்கும் செல்கின்றனர். அப்புறம் வளர்ச்சி என்பது எப்படி இருக்கும். வளர்ச்சி நம்மை தொட்டுக் கூட பார்க்காது.
இதுவரை என் மண் என் மக்கள் பாதயாத்திரை மூலமாக 167 தொகுதிகளுக்கு சென்றுள்ளேன். அந்த அனைத்து நகரங்களின் தலைநகரும் தாலுகாவாக இருக்கின்றது. ஆனால் கள்ளக்குறிச்சியில் ரிஷிவந்தியம் மட்டும் தான் தாலுகாவாக இன்னும் மாறவில்லை.
கடந்த தேர்தல் பரப்புரையில் திமுக பேசிய பொழுது ரிஷிவந்தியம் பகுதியை கண்டிப்பாக தாலுகாவாக மாற்றுவோம் என்று கூறியது. ஆனால் திமுக கட்சி ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழிந்தும் இன்னும் ரிஷிவந்தியம் தாலுகாவாக மாறவில்லை. வரும் தேர்தலில் பாஜக வெற்றி அடைந்து பாஜக கைக்கு அதிகாரம் கிடைத்துவிட்டால் ரிஷிவந்தியம் தாலுகாவாக மாற்றப்படும்.
காங்கிரஸ் ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் ஹெலிகாப்டர் ஊழல், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், சுரங்க ஊழல் என்று கிட்டத்தட்ட 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்பு வரை உரத்தட்டுப்பாடு இருந்தது. பிரதமர் மோடி அவர்கள் பதியேற்ற பிறகு உரத்தட்டுப்பாடு என்பதே இல்லை.
இந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் 181648 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 50030 குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் என்ற திட்டத்தின் கீழ் 151000 வீடுகளுக்கு பைப்லைன் மூலமாக குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இந்த சேவைகளை எல்லாம் செயல்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசிடம் லஞ்சம் வாங்குவது ஒன்றை மட்டுமே தமிழக அரசு சாதனையாக வைத்துள்ளது.
எதிர்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணியை தொடங்கிய பீகார் முதலமைச்சர் நித்திஷ்குமார் அவர்களே பாஜக கட்சியில் இணைந்துவிட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எதிர்த்து உருவாகும் கூட்டணியை மக்கள் ஏற்மாட்டார்கள். மக்களுக்கு பிடிக்காது. நாடு இன்னும் வளர்ச்சி பெற்று நன்றாக இருக்க வேண்டும் என்றால் வரும் 2024ம் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்று கூறினார்.