சிஎஸ்கே பெயரில் கட்சி தொடங்கும் தமிழ் பிரபலம்! கொடியும் ரெடி என பேட்டி! 

0
146
சிஎஸ்கே பெயரில் கட்சி தொடங்கும் தமிழ் பிரபலம்! கொடியும் ரெடி என பேட்டி!
பிக்பாஸ் பிரபலமும் பிரபல நடிகருமான கூல் சுரேஷ் அவர்கள் கட்சி தொடங்குவதாக சில தினங்களுக்கு முன்னர் தகவல் வெளியான நிலையில் கட்சி குறித்தும் கட்சி கொடி குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் கூல் சுரேஷ் கூறியுள்ளார்.
தமிழில் பல திரைப்படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்த நடிகர் கூல் சுரேஷ் அவ்வப்போது சில சர்ச்சைகளில் மாட்டிக் கொள்வதும் உண்டு. இவர் வெளியாகும் புது திரைப்படங்களை பார்த்து விட்டு “வெந்து தணிந்தது காடு” என்று கூறும் வசனம் மிகவும் பிரபலமானது.
இதையடுத்து பட வாய்ப்புகள் குறைந்ததால்  பிக்பாஸ் 7 நிகழ்ச்சிக்கு சென்றார். இதையடுத்து தற்பொழுது தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜக கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் புதிய கட்சி தொடங்கப் போவதாகவும் கூறினார். இந்நிலையில் தற்பொழுது கட்சி குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் கூல் சுரேஷ் அவர்கள் பேசியுள்ளார்.
நடிகர் கூல் சுரேஷ் அவர்கள் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த நாடாளுமன்ற தேர்தலில் நான் பாஜக கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தேன். இதைக் கண்டு என்னை பற்றி நன்றாக தெரிந்தவர்களே அதிர்ச்சி அடைந்தனர். அது மட்டுமில்லாமல் என்னை சங்கி என்றெல்லாம் விமர்சனம் செய்தனர்.
ஆனால் உண்மை என்னவென்றால் பாஜக கட்சி மட்டுமில்லை. மற்ற கட்சிகள் என்னை பிரச்சாரம் செய்ய அழைப்பு விடுத்திருந்தாலும் நான் சென்றிருப்பேன். நான் பாஜக கட்சியின் ஆதரவாளர் கிடையாது. அவர்கள் என்னை மதித்து பிரச்சாரம் செய்ய அழைத்தார்கள். அதனால் நான் சென்று அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து கொடுத்தேன்.
நான் எந்த வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறேனோ அந்த வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று பாஜக கட்சிக்கு தெரிந்துள்ளது. அதனால் அவர்களின் விருப்பப்படி நான் மகிழ்ச்சியுடன் பிரச்சாரம் செய்து கொடுத்தேன்.
நான் பாஜக கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தேன். இதை வைத்து என்னை பார்த்து நீங்கள் பாஜக கட்சிக்கு சென்று விட்டீர்களா என்று கேள்வி கேட்கிறார்கள். அதே போல நான் ஒருவருக்கு ஆட்டை வாங்கி கொடுத்தேன். இதை வைத்து நீங்கள் உதவி செய்கிறீர்கள். கட்சி தொடங்கப் போகிறீர்களா என்று கேட்கிறார்கள்.
ஆம் நான் கட்சி தொடங்கப் போகிறேன். நான் இப்பொழுது உதவி செய்தவன் அல்ல. 2000ம் ஆண்டு முதல் என்னால் முடிந்த உதவிகளை மக்களுக்காக செய்து வருகிறேன். 300க்கும் மேற்பட்ட இரத்ததான முகாம்களை நான் நடத்தியுள்ளேன்.
நான் சிஎஸ்கே என்ற பெயரில் கட்சி தொடங்கவுள்ளேன். இதற்காக அடுத்த வாரம் நான் டெல்லி செல்கிறேன். சிஎஸ்கே கட்சிக்கு தேவையான கொடியையும் நான் ரெடி செய்துவிட்டேன். இதற்காக குறைந்தபட்சம் 100 வாக்காளர் அடையாள அட்டையாவது இருக்க வேண்டும். கட்சி குறித்து இன்னொரு சந்திப்பில் முழுமையாக கூறுகிறேன்” என்று கூறினார்.