கம்யூனிஸ்ட் அலுவலக தாக்குதல்! பிரபலங்கள் மெளனம் – காரணம் சாதி பாசமா?

0
234
#image_title

கம்யூனிஸ்ட் அலுவலக தாக்குதல்! பிரபலங்கள் மெளனம் – காரணம் சாதி பாசமா?

சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கம்யூனிஸ்ட் அலுவலகம் சாதி சங்க நிர்வாகிகளால் அடித்து உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரத்தை சேர்ந்த உதய தாட்சாயினி (23) பாளையங்கோட்டையை சேர்ந்த மதன் (28) ஆகிய இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இதை அவர்கள் பெற்றோரிடம் கூறிய நிலையில் இரு வீட்டாரும் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரெட்டியார் பட்டியில் அமைந்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் இந்த ஜோடிக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தங்கள் மகளை காணவில்லை என பெண்ணின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பெண்ணுக்கு திருமணம் நடந்தது, அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் இருப்பது பெண்ணின் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பெண்ணின் பெற்றோர் பெண்ணை தங்களுடன் வர அழைத்துள்ளனர். ஆனால் அதற்கு அந்த பெண் மறுக்க அங்கிருந்த கட்சி நிர்வாகிகளுடன் பெண் வீட்டார் மற்றும் அவர்களுடன் வந்த ஆதரவாளர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் மோதலாக மாறி கட்சி அலுவலகம் அடித்து உடைக்கப்பட்டது. அங்கிருந்த ஒரு சில கட்சி நிர்வாகிகளும் தாக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்புக்கு அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் தடுத்தும் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக பெண்ணின் பெற்றோர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சாதி சங்க நிர்வாகி பந்தல் ராஜா உள்ளிட்டோர் அடங்குவர். தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த தாக்குதல் குறித்து செய்தி வெளியாகியும் இதற்கு முன் இது போன்ற சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த பலரும் அமைதியாக இருப்பது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சாதி ஒழிப்பை ஆதரிப்பதாக கூறிக் கொள்ளும் பல பிரபலங்கள் சம்பவங்கள் நடைபெறும் இடம் மற்றும் அதில் சம்பந்தபட்ட சமூகங்கள் அடிப்படையில் தான் கருத்து தெரிவிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த சம்பவத்திலும் அதை உறுதி செய்வது போல இதற்கு முன் இது போன்ற தாக்குதல்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த பலரும் அமைதியாக உள்ளனர்.

இது குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் தமிழகத்தில் வட மாவட்டங்கள் அல்லது கொங்கு பகுதியில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் பொழுது பெரும்பாலான பிரபலங்கள் அதை எதிர்த்து கண்டன கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் தென் மாவட்டங்களில் நடைபெறும் இது போன்ற தாக்குதலை கண்டித்து கருத்து தெரிவிப்பதில்லை. இதற்கு காரணம் சாதி பாசமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.