ஆசிரியையிடம் கைவரிசை காட்டிய ஆசாமிகள்! போலீசார் வலை வீச்சு!
கோவை மாவட்டம் பீளமேடு சிவில் எரோடிராம் நான்காவது தெருவை சேர்ந்தவர் ராஜலட்சுமி. இவர் ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் இரவு எட்டு மணியளவில் அப்பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் ராஜலட்சுமி அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளனர்.
அந்த சம்பவத்தில் அதிர்ச்சி அடைந்த ராஜலட்சுமி மயங்கி கீழே விழுந்துள்ளார்.அதையடுத்து கொள்ளையர்கள் இருவரும் அவர்களின் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற ஆசிரியை ராஜலட்சுமி பீளமேடு போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.