வடகொரியாவில் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என வடகொரியா தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில், அங்கு முதன்முறையாக ஒரு நபருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்கொல்லி கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது. சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதுமே எல்லைகள் அனைத்தையும் மூடியதோடு, சர்வதேச பயணிகளுக்கு தடை விதித்ததால் இது சாத்தியமானதாக வடகொரியா கூறியது.
வடகொரியாவில் தென் கொரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள கேசாங் நகரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பு வடகொரியாவில் இருந்து தப்பி தென்கொரியாவுக்கு சென்ற அந்த நபர் கடந்த வாரம் சட்டவிரோதமாக எல்லை தாண்டி வட கொரியாவுக்கு வந்த நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நபரை தனிமைப்படுத்தி அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதோடு கடந்த 5 நாட்களாக அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் மூத்த அரசு அதிகாரிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேசாங் நகர எல்லையை முழுவதுமாக மூடி சீல் வைக்க கிம் ஜாங் அன் உத்தரவிட்டார்.
அத்துடன் சுமார் 2 லட்சம் மக்கள் வசிக்கும் கேசாங் நகரில் முழு ஊரடங்கு உத்தரவையும் பிறப்பித்துள்ளார். அங்கு அவசர நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கிம் ஜாங் அன் கூறுகையில் “தீங்கு விளைவிக்கும் வைரஸ் நாட்டிற்குள் நுழைந்ததாக கூறக்கூடிய ஒரு முக்கியமான சூழ்நிலை உள்ளது. கேசாங் நகரை முற்றிலுமாக தனிமை படுத்துவதன் மூலம் நாட்டின் பிற நகரங்கள், பிராந்தியங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது“ எனக் கூறினார்.