மூன்றாவதும் பெண் குழந்தை என்பதால் கருகலைத்த பெண் பலியான சம்பவம் சோகத்த ஏற்படுத்தியுள்ளது.
பெண் குழந்தை என்றாலே கள்ளிபால் ஊற்றி கொலை செய்து விடும் பழக்கம் இருந்தது. அவை மெல்ல மெல்ல மறைந்து கட்டுக்குள் வந்து விட்டது அல்லது முழுவதுமாக மறைந்துவிட்டது என நினைக்கும் நேரத்தில் மூன்றாவதும் பெண் குழந்தை என்பதால் கருகலைப்பு செய்த பெண் உயிரிழந்த சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.
கடலூர் மாவட்டம், கீழக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்.இவருக்கு திருமணமாகி அமுதா என்ற மனைவியும் இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.இந்நிலையில், அவர் மூன்றாவது முறையாக அவர் கற்பம் தரித்தார். 4 மாத கர்ப்பிணியான அவர் கள்ளகுறிச்சி மாவட்டம், அசளக்கத்தூரில் வடிவேலன் என்பவருக்கு சொந்தமான மருந்தகத்தில் குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொண்டதாக தெரிகிறது.
அதில், அவருக்கு மீண்டும் பெண் குழந்தை என்பதை தெரிந்து கொண்டனர். ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதால் மூன்றாவது பெண் குழந்தை வேண்டாம் என முடிவேடுத்த அவர் அங்கேயே சட்டவிரோதமாக கருகலைப்பு செய்தார்.அதன்பின்னர், அவர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
வீட்டிற்கு வந்த அவருக்கு தொடர்ந்து ரத்தபோக்கு ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து, அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் தனியார் மருந்தகத்தில் கருகலைப்பு செய்தது தெரியவந்தது.அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லாததால் அவர்கள் இதுபோன்று பாதுகாப்பற்ற முறையில் கருகலைப்பு செய்வது தொடர்கதையாக உள்ளது. இதனை தடுக்க சுகாதாரதுறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.