அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு முதல்முறையாக தொகுதிக்கு வரும் போக்குவரத்து துறை அமைச்சர்! உற்சாகத்தில் தொண்டர்கள்!

0
86

சென்ற சட்டசபை பொதுத் தேர்தலில் குன்னம் சட்டசபை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர். அதோடு கடந்த 2018 ஆம் வருடம் முன்னாள் திமுகவின் தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக, காலமானதை தொடர்ந்து அந்த கட்சியின் தலைவராக தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கருணாநிதி இல்லாத நிலையில், புதிதாக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட கையோடு அடுத்ததாக தான் தலைவராக பொறுப்பேற்று சந்தித்த முதல் சட்டசபை தேர்தலிலேயே அபார வெற்றி பெற்று முதல் முறையாக தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றினார். அதோடு திமுக சற்றேற குறைய 10 வருடங்களுக்கு பிறகு தற்போது ஆட்சி அமைத்து இருக்கிறது.

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய முதல் அமைச்சரவையில் பல மூத்த அமைச்சர்களையும், பல இளம் அமைச்சர்களையும் நியமனம் செய்தார். அந்த வகையில் நீண்ட காலமாக திமுகவில் இருந்து வரும் திரு எஸ்.எஸ் சிவசங்கர் அவர்களை மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமித்தார் முதல்வர் ஸ்டாலின்.

சிவசங்கர் அவர்களின் தந்தை சிவசுப்பிரமணியம் கருணாநிதியின் ஆட்சி காலத்தில் பலமுறை சட்டசபை உறுப்பினராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் தந்தைக்குப் பின் தமையன் என்று விசுவாசம் மாறாமல் அப்படியே தந்தையைப் போல திமுகவிற்கு விசுவாசமாக இருந்து வருபவர் சிவசங்கர் என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்த நிலையில் தான் அவருக்கு ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கப்பட்டது. அதோடு அவர் தன்னுடைய துறையில் சிறப்பாக செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில், போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வந்த ராஜ கண்ணப்பன் போக்குவரத்து துறை ஊழியர் ஒருவரை தன்னுடைய ஜாதியின் பெயரை சொல்லி கடிந்து கொண்டதாக தகவல் பரவியது, மேலும் அது தொடர்பான வீடியோவும் வைரலானது.

இதனை அறிந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதாவது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் அவர்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்துவிட்டு, போக்குவரத்து துறை அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்த குன்னம் சட்டசபை தொகுதியின் உறுப்பினர் சிவசங்கர் அவர்களை நியமனம் செய்தார்.

மேலும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை என்பது பொதுமக்களிடம் நேரடி தொடர்பு இல்லாத துறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தான் வெற்றி பெற்று அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டு முதல் முறையாக இன்று தன்னுடைய சொந்த தொகுதிக்கு வருகை தந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், பல்வேறு நலத் திட்ட திட்டங்களையும் துவங்கி வைக்க உள்ளார்.

அதாவது பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் குன்னம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கிழுமத்தூர் ஊராட்சி பூங்கா நகர் பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை அவர் துவங்கி வைக்கிறார்.அதேபோல கீழப்பெரம்பலூர் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தையும் அவர் திறந்து வைக்கிறார்.

மேலும் அகரம் செய்து ஊராட்சி, வயலூர் ஆதிதிராவிடர் தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும் அவர் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.அத்துடன் வயலூர், பால் கூட்டுறவு சங்கத்திற்கான கட்டிடப் பணிகளையும் அவர் அடிக்கல் நாட்டி துவங்கி வைக்கிறார். கருப்பட்டாங்குறிச்சி பள்ளி கட்டுமான பணிகளையும் அவர் பார்வையிடுகிறார்.

ஆடுதுறை ஊராட்சியில் AGMT 20223 திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளையும் அவர் துவங்கி வைப்பதாக சொல்லப்படுகிறது.பெருமத்தூர் ஊராட்சியில் ஆதிதிராவிடர் நல பகுதிகளுக்கான அடிப்படை மேம்படுத்துதல் கட்டமைப்புகளையும் அவர் ஆரம்பித்து வைக்கிறார்.

தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு முதல் முறையாக தங்களுடைய பகுதிக்கு வந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சிவசங்கர் துவங்கி வைக்க உள்ளதால், பொதுமக்கள் முதல் திமுக வின் முக்கிய நிர்வாகிகள் வரையில் மிகுந்த உற்சாகத்துடன் செயல்பட்டு வருகிறார்கள். மேலும் அவருக்கு மிக பிரம்மாண்டமான வரவேற்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்து வருகிறார்கள்.