ஊரடங்கில் மாதந்தோறும் புதிய தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. தற்போதைய ஊரடங்கு, வெள்ளிக்கிழமை முடிவடைகிறது. எனவே, ஆகஸ்டு 1-ந் தேதி முதல் 31-ந் தேதிவரை அமல்படுத்தப்பட உள்ள மூன்றாம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. அதில் இரவு நேரங்களில் தனிநபர் நடமாட்டத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு நீக்கப்படுகிறது. அதாவது, இரவு நேர ஊரடங்கு இனிமேல் கிடையாது. சினிமா தியேட்டர்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்கள், நாடக அரங்குகள், மதுபான விடுதிகள், ஆடிட்டோரியம், கூட்ட அரங்குகள். சமூகம், அரசியல், விளையாட்டு, கேளிக்கை, கல்வி, கலாசாரம், மதம் ஆகியவை சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் மக்கள் பெருமளவு கூடும் நிகழ்ச்சிகள்.
கட்டுப்பாட்டு பகுதிகளில், ஆகஸ்டு 31-ந் தேதிவரை ஊரடங்கு கண்டிப்புடன் தொடர்ந்து அமல்படுத்தப்பட வேண்டும். மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, கட்டுப்பாட்டு பகுதிகள் கவனமாக வரையறுக்கப்பட வேண்டும். அப்பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும். கட்டுப்பாட்டு பகுதிகளின் விவரங்கள், அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலக இணையதளங்களிலும், மத்திய, மாநில அரசுகளாலும் அறிவிக்கப்படும். கட்டுப்பாட்டு பகுதிகளில் மக்களின் செயல்பாடுகளை மாநில, யூனியன் பிரதேச அதிகாரிகள் கண்டிப்புடன் கண்காணிக்க வேண்டும். கட்டுப்பாட்டு பகுதிகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும். அதை மத்திய சுகாதார அமைச்சகம் கண்காணிக்கும். ஆரோக்ய சேது‘ மொபைல் செயலி பயன்படுத்துவது தொடர்ந்து ஊக்குவிக்கப்படும். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.