பள்ளிகளில் மீண்டும் அமல்படுத்தப்பட்ட பழைய நடைமுறை!

Photo of author

By Parthipan K

பள்ளிகளில் மீண்டும் அமல்படுத்தப்பட்ட பழைய நடைமுறை!

கொரோனா பரவலின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அந்த வகையில் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனாவின் பரவல் குறைந்ததையடுத்து தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டு வந்தது.

அதன்படி தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த பிப்ரவரி 1-ந் தேதி முதல் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், இறைவணக்க கூட்டம், உடற்கல்வி பாடவேளை ஆகியவற்றிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படவில்லை.

இந்நிலையில் இறைவணக்க கூட்டம் மற்றும் உடற்கல்வி பாடவேளை ஆகியவற்றிற்கு மீண்டும் அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. கொரோனா தொற்று குறைந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை ஆணையர் வெளியிட்ட அறிவிப்பில்,

தற்போதைய சூழலில் கொரோனா தொற்று பரவலின் பாதிப்பு நாடெங்கும் குறைந்து கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் இதன் பாதிப்பு குறைந்துள்ளது. எனவே கொரோனா தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு உடற்கல்வி பாட வேளைக்கு அனுமதி வழங்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி உடற்பயிற்சி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் உடற்கல்வி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தும் எனலாம். எனினும் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே உடற்கல்வி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.