பெரம்பலூர் அருகே பட்டா மாறுதலுக்கு ரூபாய் 20000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்துட்பட்ட T.களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற சின்னதுரை தன்னுடைய நிலத்தை தன் மகனுக்கு பட்டா மாறுதல் செய்வதற்காக T.களத்தூர் கிராம நிர்வாக அலுவலர் தீனதயாளனிடம் விண்ணப்பித்துள்ளார்.
பட்டா மாறுதலுக்கு 20 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால்தான் பட்டா மாறுதல் செய்வேன் என்று கிராம நிர்வாக அலுவலர் கூறியதால் பணம் கொடுக்க மறுத்த சின்னதுரை பெரம்பலூர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய பணத்தை இன்று மாலை T.களத்தூர் கிராம நிர்வாக அலுவலர் தீனதயாளனிடம் சின்னதுரை கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ஹேம சித்ரா தலைமையிலான குழுவினர் கிராம நிர்வாக அலுவலர் தீனதயாளன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கிராம உதவியாளர் ஈஸ்வரியையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லஞ்சம் பெற்ற புகாரில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.