கணவனின் கழுத்தை இறுக்கி கொன்ற மனைவி!! மது பழக்கத்தால் ஏற்பட்ட விபரீதம்!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி வட்டத்தில் திடீர் குப்பம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் தான் ராமலிங்கம் ஆவார். இவருக்கு வெல்டிங் தொழில் செய்து வரும் 38 வயதான ராமமூர்த்தி என்னும் மகன் ஒருவர் உள்ளார்.
ராமமூர்த்தி-க்கு 29 வயதுடைய சந்தியா என்னும் மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒன்பது வயதுடைய சபரி ஸ்ரீ மற்றும் ஆறு வயதுடைய யாழினி என்ற இரு மகள்கள் உள்ளனர்.
ராமமூர்த்தி மது பழக்கத்திற்கு மிகவும் அடிமையாகி தினமும் வீட்டிற்கு குடித்து விட்டு வந்து மனைவியிடமும், குழுந்தைகளுடனும் பிரச்சனை செய்து வந்தார்.
மேலும், இவர் தினமும் குடித்து விட்டு வந்து சந்தியாவை மிகவும் அடித்து துன்புறுத்தி உள்ளார். மேலும், வீட்டிற்கு தேவையான பொருட்களையும் வாங்கி தராமல் எப்பொழுதும் மது அருந்தியவாறே இருந்துள்ளார்.
இதனால் பெரும் இன்னலுக்கு ஆளான சந்தியா தனது இரண்டு மகள்களையும் அழைத்துக்கொண்டு தாயின் வீட்டிற்கு சென்று விட்டார். இதையறிந்த ராமமூர்த்தி சந்தியாவின் பெற்றோர் வீட்டிற்கு குடித்து விட்டு சென்று பிரச்சனை செய்துள்ளார்.
மேலும், சண்டையில் சந்தியாவை கத்தியால் குத்த முயன்றுள்ளார். அப்போது அதிர்ஷ்டவசமாக தப்பித்த சந்தியா, ராமமூர்த்தியின் கழுத்தை தனது தந்தையுடன் சேர்ந்து கயிற்றால் இறுக்கியவாறு அவரை கொன்றுள்ளார்.
இதனால் உடனடியாக சந்தியாவும், அவரது தந்தையும் பயத்தில் தலைமறைவாகி விட்டனர். இந்த சம்பவம் குறித்து வந்த காவல் துறையினர் ராமமூர்த்தி உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், தலைமறைவான சந்தியாவையும், அவரது தந்தையையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.