இனி சாலைகளில் சிக்னலே இல்லை!! காத்திருப்பு இன்றி பயணம் செய்யலாம்!!
தமிழ்நாட்டில் சென்னையை அடுத்து பெரிய நகரமாக கருதப்படுவது கோயம்புத்தூர். இங்கு தினமும் பயணம் செய்யும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சென்னையைப் போல கோவையில் மேம்பாலம் எதுவும் இல்லை.
ஒரு சில பகுதியில் மட்டுமே மேம்பாலம் உள்ளது. மேலும் கோவையில் ஏராளமான சாலை சந்திப்புகள் இருப்பதால் போக்குவரத்து சிக்னல்களும் அதிகமாகவே உள்ளது. சிக்னலில் சிவப்பு விளக்கு ஒளிரும்போது வாகனங்கள் அனைத்தும் காத்திருந்து செல்வது நகர் முழுவதுமே உள்ளது.
அவினாசி சாலையில் நீலாம்பூர் தொடங்கி உக்கடம் வரும் வழியில் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இதற்கு காரணம் போக்குவரத்து சிக்னல்கள் அதிகமான பகுதிகளில் இருப்பது தான்.
போக்குவரத்து சிக்னல்களில் மக்கள் 30 லிருந்து 90 வினாடிகள் காத்திருக்க வேண்டும்.
இதனால் சில சமயம் அவசர ஊர்தி வாகனம் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக போலீசார் “யு டர்ன்” திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
கோவையின் முக்கிய சாலைகளில் சிக்னலின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காக இந்த “யு டர்ன்” மற்றும் ரவுண்டானா திட்டத்தை மாநகர போலீசார் கொண்டு வந்துள்ளனர். இதில் “யு டர்ன்” திட்டம் என்பது சிக்னல்கள் மூடப்பட்டு விட்டு, அதற்கு 100 மீ. முன்பும், பின்பும் வாகனங்கள் திரும்ப தடுப்புக் கற்களை அகற்றி அங்கே இடைவெளியை ஏற்படுத்தி, அதன் வழியாக வாகனங்கள் “யு டர்ன்” செய்து செல்லும் வழி ஆகும்.
அதே சமயம் சாலை வசதி அகலமாக இருந்தால் ரவுண்டானா திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறார்கள். அதாவது சிக்னல்களை நீக்கி விட்டு தடுப்புக் கற்கள் அமைத்து ரவுண்டானா ஏற்படுத்தப்பட்டு வாகனங்கள் செல்வதாகும்.
இந்த ரவுண்டானா திட்டம் உக்கடம் பைபாஸில் உள்ள வின்சென்ட் சாலை பிரிவு, கிக்காணி பள்ளி சந்திப்பு, சிந்தாமணி சந்திப்பு, சுங்கம் சந்திப்பு, லாலி சிக்னல் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மேலும் யு டர்ன் திட்டம் அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் சந்திப்பு, லட்சுமி மில் சந்திப்பு, அண்ணா சிலை சந்திப்பு, எஸ்.ஓ. பங்க் சந்திப்பு, திருச்சி சாலையில் சிங்கநல்லூர் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
வாகனங்கள் நெரிசலில் சிக்காமல், சிக்னலில் காத்திருக்காமல் செல்வதற்காக இந்த திட்டங்கள் அறிமுகப்படுத்தி உள்ளதாக கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் கூறி உள்ளார்.