ஜெயிக்க மாட்டாருனு சொன்னாங்க..அண்ணாமலைக்காக கை விரலை வெட்டிய பாஜக நிர்வாகி..!!
பாஜக மாநில தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பாஜக நிர்வாகி ஒருவர் கை விரலை வெட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த துரை ராமலிங்கம் (55) என்பவர் கடலூர் மாவட்ட பாஜக துணைத்தலைவராக உள்ளார். இந்நிலையில் துரைமுருகன் கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலைக்கு ஆதரவு திரட்டுவதற்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவை வந்திருந்தார்.
அதனை தொடர்ந்து நேற்று மாலை வரை கோவையில் அண்ணாமலைக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். மாலை 5 மணியளவில் பிரச்சாரம் முடிந்த நிலையில், கோவையில் அண்ணாமலை தான் வெற்றி பெற வேண்டுமென கூறிவாறு திடீரென கத்தியை எடுத்து தனது இடது கை ஆள்காட்டி விரலை துரை முருகன் துண்டித்து கொண்டார்.
இதனை கண்டு பதறிய தொண்டர்கள் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து துரைமுருகன் கூறியதாவது, “நான் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவில் இருந்து வருகிறேன். இந்நிலையில், அண்ணாமலைக்கு ஆதரவாக நான் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அருகில் இருந்தவர்கள் அவர் ஜெயிக்க மாட்டார் என்று கூறினார்கள்.
அதனை கேட்டு நான் மிகுந்த வேதனை அடைந்தேன். எனவே தான் அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக என் கை விரலை துண்டித்து கொண்டேன்” என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.