அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசம்! முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களம் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறது. இலவச வாஷிங் மெஷின், ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் இலவசம், கல்வி கடன் ரத்து என பல்வேறு அசத்தலான வாக்குறுதிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட தேர்தல் அறிக்கைக்கு நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவதாக கூறப்படுகிறது.

இலவசங்களை அள்ளி வீசுகிறார் முதலமைச்சர், அது அனைத்துமே உங்கள் தலையில் தான் சுமையாக வந்து விழும் என்ற விமர்சனங்களை எல்லாம் கடந்து, தேர்தல் களத்தில் கவர்ச்சி அறிவிப்புக்களுக்கு தனி மதிப்பு உண்டு என்பதை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். நாளை வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியாக உள்ள நிலையில், முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார். தொகுதி வாரியாக மக்களை சந்தித்து அவர்களிடம் அதிமுகவின் நலத்திட்டங்களையும், தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகளையும் எடுத்துக்கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.

அதன்படி இன்று திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் பேசிய முதலமைச்சர் எட்ப்பாடி பழனிசாமி அசத்தல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அனைத்து குடும்ப அட்டைகளுக்கு 6 கேஸ் சிலிண்டர்களும், வாஷிங் மெஷினும் விலையில்லாமல் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்கு முன்னதாக தேர்தல் அறிக்கையில், அரிசி அட்டைதார்களுக்கு மட்டுமே இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் அனைவரும் விலையில்லா 6 சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.