அதிமுகவில் இருந்து பிரிந்து சென்று இரு வேறு அணியாக மாறிய ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் தர்ம யுத்த முடிவு டிடிவி தினகரனுக்கு சம்பட்டி அடியாக விழுந்தது. இபிஎஸ் – ஓபிஎஸ் இணைவால் தனித்துவிடப்பட்ட தினகரன் சின்னம்மாவின் ஆதரவுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்து, ஆர்.கே. நகர் தேர்தலிலும் வெற்றி பெற்றார். அதன் பிறகு இருகட்சிகளிடையே நடந்து வரும் பிரச்சனைகள் அனைவரும் அறிந்தது தான்.
இடையில் சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா தேர்தலுக்கு முன்னதாகவே விடுதலையானது பரபரப்பைக் கிளப்பியது. அதிமுகவை கைப்பற்றி, மீண்டும் பொதுச்செயலாளராக அமரப்போகிறார் என அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார் சசிகலா. இத்தோடு எல்லாம் முடிந்தது என நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில் தான் தேர்தலில் தனித்து களமிறங்க திட்டமிட்டார் டி.டி.வி.தினகரன்.
ஓவைசி, விஜயகாந்த் கட்சிகளுடன் ஸ்ட்ராங் கூட்டணியை வேறு அமைத்துள்ளதால் 2016ம் ஆண்டு திமுகவிற்கு நடந்தது, அதிமுகவிற்கு நடக்கப்போகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 2016 சட்டமன்ற தேர்தலின் போது மக்கள் நல கூட்டணியால் திமுக கணிசமான வாக்குகளை இழந்தது. அதே வரலாறு நடப்பு தேர்தலில் அதிமுகவிற்கு நடக்கும் என கதறியுள்ளார் அக்கட்சியின் முக்கிய பிரமுகரும், தினகரனின் ஆதரவளாருமான ரத்தின சபாபதி. அறந்தாங்கி தொகுதியில் மீண்டும் போட்யிட வாய்ப்பு மறுக்கப்பட்டதை அடுத்து அதிருப்தியில் இருந்த ரத்தின சபாபதி நேற்று கட்சி பதவியை ராஜினாமா செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வர உள்ள சட்டமன்ற தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் அதிகபட்சம் 20 ஆயிரம் வாக்குகளை அமமுக பிரிக்கப்போகிறது, இது அதிமுகவின் மிகப்பெரிய பின்னடைவாக மாற உள்ளது. அமமுக – அதிமுக இணைந்திருந்தால் இந்த சிக்கலை தவிர்த்திருக்கலாம் என்பதால் இருகட்சிகளும் இணைய வலியுறுத்தினேன். ஆனால் தினகரனுக்கு ஆதரவாக பேசியதாக இந்த முறை எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. தற்போது தோல்வி பயத்தால் தான் அமமுகவை அதிமுகவுடன் இணைக்க வேண்டும் என ஓபிஎஸ் கூறுகிறார். ஆனால் இறுதிக்கட்டத்தில் இவர்கள் போடும் கன்டிஷன்களை எல்லாம் ஏற்றுக்கொண்டு அமமுக வருமா என்பதில் சந்தேகம் தான் பகீர் கிளப்பியுள்ளார்.