கிருஷ்ணகிரி கொலை வழக்கில் சரணடைந்த இருவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!

0
190
#image_title

கிருஷ்ணகிரியில் ஆணவ படுகொலை வழக்கில் சரணடைந்த இருவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுத்த கிருஷ்ணகிரி நீதிமன்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே மகன் சுபாஷ், காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம் அடைந்த தந்தை தண்டபாணி, கடந்த மார்ச் 21ம் தேதி மகனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.

இதை தடுக்க சென்ற பாட்டி கண்ணம்மாளையும் கொலை செய்தார். இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த மருமகள் அனுசுயா உயிர் தப்பினார்.

இந்த ஆணவக்கொலை சம்பவத்தில் தலைமறைவாக இருந்த தந்தை தண்டபாணியை போலீசார் கைது செய்த நிலையில், உடந்தையாக இருந்த நாகராஜ், முரளி ஆகியோர் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, 15 நாட்கள் நீதிமன்ற காவல் நிறைவடைவதற்கு முன்பாக காவல்துறை கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

ஆனால் 15 நாட்கள் நீதிமன்ற காவல் நிறைவடைந்து விட்டதால் போலீஸ் காவலுக்கு அனுமதிக்க முடியாது என கூறி காவல்துறையின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்த போது, இந்த சம்பவத்தில் முதல் எதிரியான தந்தையிடம் காவல்துறையினர் ஏற்கனவே விசாரணை நடத்திவிட்டதால், இருவரிடமும் விசாரணை நடத்த தேவையில்லை என சரணடைந்தவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

காவல் துறை தரப்பில், 15 நாட்கள் நீதிமன்ற காவல் முடிவடைவதற்கு முன்பே போலீஸ் காவல் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும், உத்தரவு பிறப்பிப்பதில் நீதிபதி காலதாமதம் செய்ததாக கூறப்பட்டது.

குற்றத்தின் தன்மையை கருதி மனு தாக்கல் செய்த அன்றைய தினமே மனு மீது முடிவெடுத்திருக்க வேண்டுமெனவும் வாதிடப்பட்டது.

காவல்துறை வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இருவரையும் ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்குமாறு கிருஷ்ணகிரி நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.

Previous articleஆருத்ரா விவகாரம்: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மீது குற்றச்சாட்டு!
Next articleகாங்கிரஸ் கட்சி என்னை தொடர்ந்து அவதூறு செய்தாலும் நாட்டுக்கு சேவை செய்ய என்னை அர்ப்பணிப்பேன் – பிரதமர் மோடி!