தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக்கொடி! இதற்கு காரணம் யார்? இது எங்கே நடந்தது?

Photo of author

By Parthipan K

தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக்கொடி! இதற்கு காரணம் யார்? இது எங்கே நடந்தது?

குடியரசு தின விழா நேற்றைய தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்தியாவில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா பெருந்தொற்றின் பரவல் காரணமாக குடியரசு தின விழா ஒருசில கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு அதற்கிடையில் குடியரசு தினமானது கொண்டாடப்பட்டது.

கேரளாவில் தொல்லியல் மற்றும் துறைமுகத்துறை அமைச்சராக இருப்பவர் அகமது தேவர்கோவில். இவர் காசர்கோடு ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றினார். காசர்கோடு மாவட்ட ஆட்சியர் விடுப்பில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆகவே, அவருக்கு பதிலாக அமைச்சர் அகமது தேவர்கோவில் தேசியக் கொடியை ஏற்றினார்.

அப்போது தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டு இருந்தது. தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டிருந்ததை அமைச்சர்கள் உள்பட அங்கிருந்த அதிகாரிகள் யாரும் கவனிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக்கொடிக்கு அமைச்சர் உள்பட அங்கிருந்த அதிகாரிகள் அனைவரும் மரியாதை செலுத்தி உள்ளனர்.

இந்நிலையில் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் கொடி மாற்றி ஏற்றப்பட்டுள்ளதை அமைச்சரிடம் தெரிவித்துள்ளார். இதை கண்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக தேசியக்கொடி கீழே இறக்கப்பட்டு, சரி செய்து மீண்டும் நேராக ஏற்றப்பட்டது. தொடர்ந்து அங்கு நடந்த காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை மந்திரி ஏற்று கொண்டார்.

இதற்கிடையில் தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றியது தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசியக்கொடியை ஏற்றுவதற்கு முன் அந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த அதிகாரிகளின் கவனக் குறைபாடே இந்த தவறுக்கு காரணமாக கூறப்படுகிறது.