மதர் தெரேசா உருவ பட கவர்களில் விபூதி மற்றும் குங்குமம்!! கோவில் சிவாச்சாரியர்கள் பணியிடை நீக்கம்!!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் இது பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னி தலமாகும். மிகவும் புகழ் பெற்ற இத்தலத்திற்கு வெளியூர்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இந்த கோவிலில் பௌர்ணமி தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பௌர்ணமி அன்று ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கோவிலை சுற்றியுள்ள பாதையில் கிரிவலம் செல்வார்கள். நாளை மே 4 இரவு 11.59 மணிக்கு சித்ரா பௌர்ணமி தொடங்குகிறது. இந்த நேரம் கிரிவலத்திற்கு உகந்த நேரமாகும். இந்த மாதம் சித்ரா பௌர்ணமி என்பதால் கூடுதல் சிறப்புகளை பெற்றது.
இந்த சித்ரா பௌர்ணமி நேரத்தில் பக்தர்களின் வருகை மிகவும் அதிகரிக்கும். இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோவிலில் கிறிஸ்துவ மத அடையாளத்தில் அச்சிடப்பட்ட கவர்களில் விபூதி, குங்குமம் வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர் கே.சோமநாத குருக்கள் மற்றும் ஸ்தானீகமாக பணியாற்றும் ஏ.முத்துகுமாரசாமி குருக்கள் ஆகிய இருவரும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உத்தரவு இல்லாமலும் கோவில் நிர்வாகத்துக்கு தெரிவிக்காமலும் நிர்வாகத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் உபயதாரர் மூலம் வழங்கப்பட்ட கவர்களை நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் கடந்த மே 1 ஆம் தேதி பக்தர்களுக்கு வழங்கியுள்ளனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து இந்து முன்னணி அமைப்பினர், அண்ணாமலையார் கோவில் இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணாமலையார் கோவிலில் வழங்கும் பிரசாத கவர்களில் அண்ணாமலையாரின் படம் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், வேறு மத கவர்களை பக்தர்களுக்கு கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பட வேண்டும் என்று கூறினார்.
அவர்களிடம் கோவில் அதிகாரிகள் ஒரு மணி நேர பேச்சு வார்த்தை நடத்தி இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின்னரே முற்றுகை போராட்டத்தை கை விட்டனர்.இதனை தொடர்ந்து திருக்கோவில் நிர்வாகத்திற்கு தெரிவிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்ட இரண்டு சிவாச்சாரியர்களையும் 6 மாத காலம் பணியிடை நீக்கம் செய்துள்ளார் கோவில் இணை ஆணையர் வே.குமரேசன்.