மீண்டும் விசா இல்லாத நுழைவு அமல்!! சீனா அரசு அறிவிப்பு!!
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் உலகையே சூறையாடி வந்த ஒரு கொடிய நோய் தான் கரோனா. இது முதலில் சீனாவில் பரவ ஆரம்பித்து பிறகு உலகம் முழுவதும் பரவி, ஏராளமான உயிர்களை பறித்து வந்தது.
சீனாவில் கரோனா பதிப்பு அதிகமாக இருந்ததால், விசா இல்லாத நுழைவுக்கு சீன நாடு தடை விதித்தது. அதனைத்தொடர்ந்து தற்போது கரோனா பரவல் குறைந்திருக்கிறது.
எனவே, மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிங்கப்பூர் மற்றும் புருனே குடிமக்களுக்கு பதினைந்து நாள் விசா இல்லாத நுழைவை சீனா கொண்டு வந்துள்ளது.
இது வரும் புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது. அந்த வகையில், வணிகம், சுற்றுலா, நண்பர்கள் மற்றும் உறவினர்களை காண வருபவர்களுக்கு 15 நாள் இந்த விசா இல்லாத நுழைவு கொடுக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும், சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே பொதுமக்களின் போக்குவரத்தை சுலபமாக்குவதற்கான நடவடிக்கைகள் வரும் நாட்களில் கண்டிப்பாக மேற்கொள்ளப்படும் என்று சீன தூதரகமானது சிங்கப்பூரில் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சீனா மற்றும் சிங்கப்பூர் மக்களுக்கு இடையேயான போக்குவரத்து மற்றும் வணிக பரிமாற்றத்தை மிகவும் சுலபமாக்கும் என்று வெளி உறவு அமைச்சகம் ஒரு பதிவில் கூறி உள்ளது.
சீனாவின் ஜீரோ-கோவிட் கொள்கை 2022 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் கைவிடப்பட்டது. ஆனால் மார்ச் மாதம் வரையிலுமே சீனா சுற்றுலா விசாக்களை தொடங்காமல் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.