பட்டனை தட்டியவுடன் இயங்குவதற்கு தொழிலாளர்கள் என்ன இயந்திரமா?? ஆளுங்கட்சியை எதிர்த்து பழனிச்சாமி ஆவேசம்!
12 மணி நேரம் வேலை செய்வதற்கு தொழிலாளர்கள் ஒன்றும் இயந்திரம் இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி ஆளுங்கட்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,
12 மணி நேரம் வேலை செய்வதற்கு தொழிலாளர்கள் ஒன்றும் இயந்திரம் இல்லை. இந்த வேலை நேரம் மனித வாழ்க்கைக்கு சரி வராத ஒன்று. ஸ்விட்ச் போட்டால் இயங்குவது போன்றது அல்ல மனிதனின் வாழ்க்கை. இந்த 12 மணிநேர வேலை மசோதாவுக்கு திமுகவின் கூட்டணிக் கட்சிகளே கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சட்டப்பேரவையில் நான் பேசுவதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது 12 மணி நேர வேலை திட்டம் மசோதாவை ஸ்டாலின் அவர்கள் கடுமையாக எதிர்த்தார். எதிர்க்கட்சியாக சரியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடும், ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடும் கொண்டவர் ஸ்டாலின். இதுவே அவரது பண்பாடு.
மேலும் அவர் பேசுகையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ குறித்து முறையான விசாரணை செய்ய வேண்டும். 30 ஆயிரம் கோடி தொடர்பான அந்த ஆடியோ விவகாரத்தில் மத்திய அரசை விசாரிக்குமாறு வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.