உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. இந்த கொடிய தொற்றுக்கு விஞ்ஞானிகள் மருந்து கண்டுபிடிப்பதில் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் உலக பொருளாதார கூட்டமைப்பும், இப்சோஸ் என்ற சந்தை ஆய்வு நிறுவனமும் இணைந்து, கொரோனா தடுப்பூசி குறித்து, உலக அளவில் கடந்த ஜூலை 24-ந்தேதியில் இருந்து ஆகஸ்டு 7-ந்தேதிவரை ஒரு கருத்துக்கணிப்பை நடத்தின அமெரிக்கா, இத்தாலி உள்பட 27 நாடுகளில் மொத்தம் 20 ஆயிரம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டது.
அதன்படி, 74 சதவீதம்பேர், தங்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைத்தால் போட்டுக்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தனர். ஆனால், 26 சதவீதம்பேர் கொரோனா தடுப்பூசி கிடைத்தாலும் அதை போட்டுக்கொள்ள விரும்பவில்லை என்று தெரிவித்தனர். பக்க விளைவுகள் ஏற்படுமோ, அதன் செயல்திறன் எப்படி இருக்குமோ என்ற அச்சமே இதற்கு காரணம் ஆகும். இந்தியாவை பொறுத்தவரை, 13 சதவீதத்துக்கும் குறைவானவர்களே இப்படி கூறினர். தடுப்பூசியின் நம்பகத்தன்மையை பொதுமக்களிடையே அதிகரிக்க அரசு-தனியார்-ஆராய்ச்சியாளர்கள்-உற்பத்தியாளர்கள் இடையே ஒத்துழைப்பு நிலவ வேண்டும் என்று உலக பொருளாதார கூட்டமைப்பை சேர்ந்த அர்னாட் பெர்னார்ட் கருத்து தெரிவித்தார்.