பள்ளிக்கு ஷ்டைலாக வந்த “புள்ளிங்கோ” மாணவர்கள் !! கெஞ்சியும் மனமிரங்காமல் ஆசிரியர்கள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை !!
அரசு பள்ளியில் அலங்கோலமாக தலைமுடியை வெட்டி வந்த மாணவர்களுக்கு அரசு ஆசிரியர்கள் அதிரடியான நடவடிக்கையை மேற்கொண்டனர். அங்கு ஸ்டைலாக முடிவெட்டி வந்த 100 மாணவர்களின் தலைமுடியை ஆசிரியர்களே வெட்டி திருத்தம் செய்தனர்.
திருவொற்றியூரில் விம்கோ நகரில் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1350 க்கும் மேற்பட்ட மாணவ – மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த சூழ்நிலையில் கோடை விடுமுறை முடிந்ததும் லீவில் வீட்டில் ஸ்டைலாக தலைமுடியை கட் செய்த மாணவர்கள் அப்படியே பள்ளிக்கு வந்திருந்தனர். அவர்களிடம் ஆசிரியர்கள் முடியை திருத்தம் செய்யும்படி கூறியும் மாணவர்கள் கண்டுகொள்ளாமல் அவர்கள் இஷ்டத்துக்கு ஸ்டைலாக பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர்.
மாணவர்கள் தங்களுக்கு ஏற்றவாறு புள்ளிங்கோ ஸ்டைல்’, ‘டபுள் சைடு’ கோடு, ‘பாக்சர்’, ‘மஸ்ரூம் கட்டிங்’, ‘லைன் கட்டிங்’, ‘டாப் கட்டிங்’ உள்ளிட்ட விதவிதமான ‘ஸ்டைலில்’ அலங்கோலமான தலைமுடியுடன் பள்ளிக்கு தினமும் வந்து கொண்டிருந்தனர். இதையடுத்து ஸ்டைலான தலைமுடியுடன் பள்ளிக்கு வந்த 100 மாணவர்களை தலைமை ஆசிரியர் பாலாஜி உட்பட ஆசிரியர்கள் பிடித்து மரத்தடியில் அமர வைத்து முடிகளை திருத்தம் செய்தனர். இதில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் மட்டும் 62 பேர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பணிக்கு பள்ளி கல்விகுழு உறுப்பினர் கவுன்சிலர் கே.பி.சொக்கலிங்கம் முயற்சியால் ஐந்துக்கும் மேற்பட்ட முடி திருத்தும் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு மாணவர்களின் முடி திருத்தம் செய்யப்பட்டது. அப்போது ஸ்டைலான தலைமுடியை வெட்டும் பொழுது மாணவர்கள் ஆசிரியர்களிடம் கெஞ்சினர். ஆனால் அலங்கோலமாக இருப்பதாக கூறி மாணவர்களின் முடி வெட்டி திருத்தம் செய்யப்பட்டது. அந்த பணியில் ஆசிரியர்களும் கலந்து கொண்டு சில மாணவர்களின் முடிகளை வெட்டி திருத்தம் செய்தனர்.
பின்னர் மாணவர்கள் அனைவருக்கும் ஆசிரியர்கள் சார்பில் தலைமுடி ஒழுக்கம் குறித்து அறிவுரை வழங்கப்பட்டு இனிமேல் எப்படி பள்ளிக்கு வர வேண்டும் என ஆலோசனையும் கூறப்பட்டு வகுப்புக்கு அனுப்பப்பட்டனர். இதனால் பள்ளி வளாகமானது காலையிலேயே பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.